Skip to main content

கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரம்; பேச்சுவார்த்தை தோல்வி!

Published on 15/07/2024 | Edited on 15/07/2024
Kappalur tollgate issue; Negotiation failure

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கச்சாவடியில் புதிய சுங்க கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தலைமையில் கடந்த 10 ஆம் தேதி (10.07.2024) அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கான கட்டண விலக்கு நிறுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த ஆர்ப்பாட்டமானது நடைபெற்றது. உள்ளூர் வாகன ஓட்டிகளுக்கு மாதம் தோறும் 340 ரூபாய் கட்டணம் கடந்த 10 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருந்ததை எதிர்த்து இந்த போராட்டத்தை அதிமுக நடத்தியது. அதிமுகவினர் உட்பட 1000க்கும் மேற்பட்டோர் இந்த மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுங்கச்சாவடி வழியாகச் செல்லும் வாகனங்கள் அனைத்தும் மாற்றுப்பாதை வழியாகச் சென்றன. கப்பலூர் பகுதியில் இதன் காரணமாகப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

அதே சமயம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் கவுண்டர் முன் அமர்ந்து பழைய முறையே தொடரும் எனச் சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கும் வரை போராட்டம் தொடரும் என கல்லுப்பட்டி பேரையூர் வாகன ஓட்டிகள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். மேலும் கிராம மக்களுடன் போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டார். அதே சமயம் போராட்டக்காரர்களைக் கலைக்க 500க்கும் மேற்பட்ட காவல்துறையினரும் சுங்கச்சாவடியில் குவிக்கப்பட்டனர். 

Kappalur tollgate issue; Negotiation failure

இதற்கிடையே இது தொடர்பான பேச்சுவார்த்தை நிறைவடையும் வரை உள்ளூர் மக்களுக்கு டோல்கேட் கட்டண விலக்கு அளிக்கப்படும் எனச் சுங்கச்சாவடி நிர்வாகம் அறிவித்தது. இதனையடுத்து சுமார் 10 மணி நேரமாக நடைபெற்று வந்த கப்பலூர் சுங்கச்சாவடி முற்றுகை போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. வரும் திங்கட்கிழமை (அதாவது இன்று) பேச்சுவார்த்தை நடத்துவதாக போலீசார் உத்தரவாதம் அளித்ததைத் தொடர்ந்து சுங்கச்சாவடி முற்றுகை போராட்டத்தை வாபஸ் பெறுவதாகப் போராட்டக்குழு அறிவித்திருந்தது. இதனையடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்நிலையில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் இன்று (15.07.2024) நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை, திருமங்கலம் நகராட்சி மக்கள், என அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. கப்பலூர் சுங்கச்சாவடியை நிரந்தரமாக அகற்றக்கோரியும், உள்ளூர் மக்களுக்கு 100 சதவீதம் கட்டண விலக்கு அளிப்பது தொடரான விவகாரத்தில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. 

சார்ந்த செய்திகள்