காஞ்சிபுரம் ஏகாம்பரேசுவரர் கோயிலுக்கு சொந்தமான தொன்மை வாய்ந்த எட்டு கோடி ரூபாய் மதிப்பிலான சோமஸ்கந்தர் உலோக சிலை, அமெரிக்காவில் சான்பிரான்ஸிஸ்கோ ஆசியன் ஆர்ட் மியூசியத்தில் இருப்பதை சிலை திருட்டு தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்பு பிரிவினர், காவல்துறைத் தலைவர் இரா. தினகரன் தலைமையில், காவல் கண்காணிப்பாளர் ஆர். சிவகுமார் மேற்பார்வையில் பல தனிப்படைகள் அமைக்கப்பட்டு வெளிநாட்டில் உள்ள தனியார் அருங்காட்சியகங்கள், தனி விற்பனையாளர்கள் நடத்தும் அருங்காட்சியகங்களின் இணையதளங்களில் தமிழ்நாட்டுக்குச் சொந்தமான ஏதேனும் சிலைகள் கடத்தப்பட்டு காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த இணையதள தேடலில் வடக்கு மண்டல சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தமிழ்செல்வி, அமெரிக்காவில் உள்ள சான் பிரான்ஸ்சிஸ்கோ ஆரியன் ஆர்ட் மியூசியத்தில் ஒரு உலோக சோமஸ் கந்தர் சிலை காட்சிப்படுத்தப்பட்டு இருப்பதைக் கண்டறிந்தார். இந்த சிலையானது காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோயிலைச் சேர்ந்தது என்று அருங்காட்சியகம் நடத்துபவர்கள் இணையதளத்தில் குறிப்பிட்டு இருந்தார்கள். இதன் காலம் கி.பி 1500 முதல் 1800க்குள் என்றும் இந்த உலோக சிலை வெண்கலத்தால் ஆனது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த சிலையின் பீடத்தின் முன் பகுதியில் தெலுங்கு மொழியில் இந்த சிலையை தானம் செய்தவர் பெயர் (அவரின் தந்தை மற்றும் பாட்டனார் பெயர்) பொறிக்கப்பட்டும். இந்த சிலை காஞ்சிபுரம் நகரில் உள்ள ஏகாம்பரேசுவரர் (ஏகாம்பரநாதர்) கோவிலுக்காகச் செய்யப்பட்டது எனவும் பொறிக்கப்பட்டு இருக்கிறது.
சிலையின் பீடத்தில் தெலுங்கு மொழியில் நான்கு வரிகள் பொறிக்கப்பட்டுள்ளது. அது கல்வெட்டு வல்லுநர்கள் உதவியுடன் மொழி பெயர்க்கப்பட்டதில் மேற்கண்ட சோமஸ்கந்தர் சிலையானது காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவிலைச் சேர்ந்தது உண்மையென உறுதிசெய்யப்பட்டது. அதன் மொழி மாற்றம், ‘பதினொரு சிலைகளைப் பரிசாக ஏகாம்பரேசுவரர் கோயிலுக்குத் தொண்டை மண்டலத்தைச் சேர்ந்த வெங்கட்ராமநாயனி த.பெ வெள்ளக்கொண்டம நாயனி த.பெ. ராகவநாயனியால் கொடுக்கப்பட்டது’ என ஆவணப்படுத்துகிறது.
இந்த சிலையின் சர்வதேசச் சந்தை மதிப்பு தோராயமாக எட்டு கோடி ரூபாய் இருக்குமெனவும், இந்த சிலையின் அமைப்பு மற்றும் எழுத்துக்களைப் பார்க்கும் போது இந்த சிலை 18 ம் நூற்றாண்டினை சேர்ந்ததாக இருக்கும் எனவும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். மேற்கண்ட சோமஸ் கந்தர் உலோக சிலை காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரேசுவரர் கோயிலில் இருந்து அடையாளம் தெரியாத குற்றவாளிகளால் திருடப்பட்டு பின்பு அமெரிக்காவில் உள்ள சான்பிரான்சிஸ்கோ ஆசியன் ஆர்ட் மியூசியத்தில் சர்வதேச கடத்தல்காரர்களின் உதவியுடன் விற்கப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்தது. சிலை திருட்டுநடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வி அளித்த புகாரின் பேரில் சிலை திருட்டு தடுப்பு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பி.கே. பிரகாஷ், இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக இந்த சோமஸ் கந்தர் சிலையை அமெரிக்காவிற்குக் கடத்தியவர்களைக் கண்டறியவும், மேலும் இந்தச் சிலையைத் தமிழ்நாட்டுக்கு மீட்டு வருவதற்கும் துரித நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதே கோயிலைச் சேர்ந்த வேறு ஏதேனும் சிலைகள் வெளிநாடுகளுக்குக் கடத்தப்பட்டுள்ளதா எனவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் சங்கர் ஜிவால், தமிழ்நாடு சிலை தடுப்பு பிரிவு காவல் அதிகாரிகளை வெகுவாகப் பாராட்டினார்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.