கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் செயல்படுத்தத் தமிழக அரசு தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அந்த வகையில் இந்தத் திட்டத்திற்குத் தகுதியான பயனாளிகளைத் தேர்ந்தெடுக்கும் வகையில் முதற்கட்ட விண்ணப்ப விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்துப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பதிவு செய்யும் முகாமைத் தருமபுரி மாவட்டம், தொப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஜூலை 24 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக ஜூலை 24 ஆம் தேதி முதல் கடந்த 4 ஆம் தேதி வரை நடைபெற்ற விண்ணப்பப் பதிவு முகாமில் 88 லட்சத்து 34 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக இரண்டாம் கட்ட முகாம்கள் கடந்த 5 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது. இரண்டாம் கட்ட முகாமில் இதுவரை 59 லட்சத்து 86 ஆயிரம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
இதற்கிடையில் இந்த திட்டம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், இந்திரா காந்தி விதவையர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதையடுத்து கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் முதல் மற்றும் இரண்டாம் கட்ட முகாம்களின் போது நிர்ணயிக்கப்பட்ட தேதிகளில் வர முடியாமல் விடுபட்ட நபர்கள், ஓய்வூதியதாரர்களின் குடும்பங்களில் உள்ள பெண்கள் பயன்பெறும் வகையில் கடந்த 3 நாட்களாக (ஆகஸ்ட் 18,19,20) சிறப்பு முகாம்கள் நடைபெற்று முடிவடைந்துள்ளது.
இந்நிலையில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு 1.55 கோடி பெண்கள் விண்ணப்பித்துள்ளனர். முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்களைச் சரிபார்க்க கள ஆய்வுகள் மூலம் பரிசீலனை மேற்கொள்ளப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் இனி நடத்தப்பட வாய்ப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது நிராகரிக்கப்பட்டதா என்பது குறித்து விண்ணப்பத்தாரர்களின் தொலைபேசி எண்களுக்கு குறுஞ்செய்திகள் அனுப்பப்பட உள்ளன. மேலும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்யும் பணிகளை இம்மாத இறுதிக்குள் முடிக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.