நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில் திருச்சியில் பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா இன்று (07.07.2024) மாலை ரோடு ஷோ செல்வதற்கு காவல்துறை மற்றும் தேர்தல் ஆணையம் சார்பில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணிக்கு அனுமதி கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாஜக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கை அவசர வழக்காக நீதிபதி முரளிசங்கர் விசாரித்தார். அப்போது நீதிபதி, “திருச்சி கண்ணப்பா ஹோட்டல் முதல் இ.எஸ்.ஐ. மருத்துவமனை வரை ஜெ.பி.நட்டா ரோடு ஷோவை நடத்திக்கொள்ளலாம். மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை 1.5 கி.மீ. வரை ரோடு ஷோ நடத்திக்கொள்ளலாம்” என உத்தரவிட்டார்.
மேலும் திருச்சியில் ஜெ.பி.நட்டாவின் வாகன பேரணியை மாற்றுப்பாதையில் நடத்த அனுமதி வழங்க காவல்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது. முன்னதாக அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் சிதம்பரம் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாகவும், கரூரிலும் பாஜக சார்பில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்களில் ஜெ.பி.நட்டா கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.