தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்பட 5 மாவட்ட விவசாயிகளின் நீர் ஆதாரமாக முல்லை பெரியார் அணை உள்ளது. 152 அடி உயரமுள்ள இந்த அணையில், 1979ஆம் ஆண்டு கேரள அரசு 136 அடியாக நீர் தேக்க அளவைக் குறைத்தது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப் போராட்டங்கள் நடத்தி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதனையடுத்து, பல்வேறு நிபுணர்கள் குழு அணையின் பாதுகாப்பு குறித்து ஆய்வுசெய்து கடந்த 2014ஆம் ஆண்டு 142 அடி வரை தண்ணீரை தேக்க அனுமதி அளித்தது. மேலும், பேபி அணையைப் பலப்படுத்திய பின் 152 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம் எனவும் அறிவுறுத்தியது. மேலும், அணை பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய மூன்று பேர் கொண்ட குழுவும் அவர்களுக்கு உதவ ஒரு துணை குழுவும் அமைக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தீர்ப்புக்குப் பிறகு கடந்த 2014, 2015, 2018 ஆகிய மூன்று ஆண்டுகளில் அணையின் நீர்மட்டம் 142 வரை தேக்கப்பட்டது.
தற்போது, கேரளாவிலும் முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர் மழை பெய்துவருவதால் இந்த ஆண்டு மீண்டும் 142 அடி வரை தேக்கப்படும் என தமிழ்நாடு விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் கேரள அரசு தொடர்ந்து அணை பாதுகாப்பு குறித்து பல்வேறு சர்ச்சை கருத்துக்களைத் தெரிவித்து உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கில் நேற்று (04.11.2021) தீர்ப்பளித்த நீதிமன்றம், தொடர் மழை பெய்துவருவதால் நவம்பர் மாதம் 10ஆம் தேதி வரை 139.50 அடி வரை தண்ணீர் தேக்கிக்கொள்ளலாம் என்றும், அதற்குப் பிறகு 142 அடியாக ஏற்றிக்கொள்வதில் தடையில்லை எனவும் உத்தரவிட்டது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்ததை மீறி முல்லைப் பெரியாறு அணைக்கு கேரள நீர்ப்பாசனத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின், இடுக்கி மாவட்ட கலெக்டர் சிபா ஜார்ஜ், பீர்மேடு எம்.எல்.ஏ. வாலூர் சசோமன் மற்றும் அம்மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பார்வையிட்டனர். வனத்துறைக்கு சொந்தமான படகில் சென்று அணையின் பகுதிகளைப் பார்வையிட்டு கேரள போலீசாரிடம் விவரங்களைக் கேட்டறிந்தனர். அதன்பிறகு கேரள மாநில அரசு அதிகாரிகள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. அதில் முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 29ஆம் தேதி காலை 7 மணி அளவில் அணைப் பகுதிக்குச் சென்ற அமைச்சர் ரோஸி அகஸ்டின் மற்றும் அம்மாநில அதிகாரிகள் பெரியாறு அணையில் 3 மற்றும் 4வது மதகைத் திறந்து தண்ணீரை உபரியாக வெளியேற்றினர். மொத்தம் உள்ள 13 மதகுகளில் இரண்டு மதகுகள் வழியாக வினாடிக்கு 34 கன அடி நீர் திறக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் 139.50 அடி வரை தேக்கிக்கொள்ள சம்மதம் தெரிவித்துவிட்டு, 29ஆம் தேதி காலை 138.70 அடியை எட்டியிருந்தபோதே தண்ணீர் திறக்கப்பட்டது கண்டு தமிழ்நாடு விவசாயிகள் அதிர்ச்சியடைந்தனர்.
அதனால், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய மாவட்ட விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது கண்டனங்களைத் தெரிவித்தனர். அதேபோல், எதிர்க்கட்சியான அதிமுக, ‘முல்லை பெரியாறு அணையில் 142 அடிவரை தண்ணீர் தேக்கி வைக்கலாம் என்ற உத்தரவு அமலில் இருந்தாலும், சில காரணங்களால் அணையில் 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்க முடியாத சூழ்நிலை நிலவிவருகிறது. மேலும், அணை பலவீனமாக இருக்கிறது, உடைய வாய்ப்பிருக்கிறது போன்ற அவதூறுகளைக் கேரளாவைச் சேர்ந்த சிலர் தொடர்ந்து பரப்பிவருகிறார்கள். இதனைக் கருத்தில்கொண்டும், கேரள மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையிலும் அணையில் 142 அடி வரை தண்ணீரை தமிழக அரசு தேக்கி வைக்காமல் உள்ளது. இந்நிலையில், 142 அடி வரை தண்ணீரைத் தேக்கி வைக்க வேண்டும் என்று கோரி அதிமுக வரும் 9ஆம் தேதி தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட மாவட்டங்களில் போராட்டம் நடத்தப்படும்’ என்று அறிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், இதுகுறித்து நிலையான வழிகாட்டுதலின்படி கேரள அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டது. மதகுகள் திறக்கப்படும்போது கேரள மாநில நீர்வளத்துறை அமைச்சரும் மற்றும் சில அதிகாரிகளும் உடனிருந்து பார்வையிட்டார்கள். உண்மை நிலை இவ்வாறு இருக்க, ஏதோ கேரள அரசின் அதிகாரிகள்தான் அணை மதகுகளைத் திறந்தார்கள் என்று பரப்பப்பட்டுவருகிறது என்று விளக்கம் அளித்திருந்தார். அதேபோல், இன்று (5ஆம் தேதி) முல்லை பெரியாறு அணையை ஆய்வுசெய்ய இருப்பதாகவும் முன்கூட்டியே தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் இன்று காலை முல்லை பெரியாறு அணைப் பகுதிக்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி மற்றும் அமைச்சர்கள் மூர்த்தி, சக்கரபாணி ஆகியோர் சென்றுள்ளனர். இவர்கள் பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் படகில் சென்று அணையின் மதகு உள்ளிட்டவற்றை ஆய்வுசெய்ய இருக்கின்றனர்.