4 ஆண்டுகளுக்கு முன்பு ‘நக்கீரன்’ தளம் வெளியிட்ட ஜெயலலிதா திணறிப் பேசும் ஆடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு 75 நாட்கள் சிகிச்சை பெற்ற நிலையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி மரணமடைந்தார். 2016ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை ஜெயலலிதாவின் மரணம் தொடர்பான சர்ச்சைகள் நீடித்துக் கொண்டே போகிறது.
இந்நிலையில், ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட அடுத்த நாளில் இருந்து நக்கீரன் தளம் பல்வேறு அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டு வந்தது. அதில், ஜெயலலிதாவை அடக்கம் செய்யும்போது அவரது இரண்டு கால்களும் துண்டிக்கப்பட்டிருந்தது என்று நக்கீரன் தளம் அந்த செய்தியை பகிரங்கமாக அம்பலப்படுத்தியது. இந்த செய்தி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதை ஆதாரத்துடன் வெளியிட்டதை அடுத்து ஜெயலலிதா சிகிச்சை குறித்த அதிர்ச்சி ஆடியோ ஒன்றை வெளியிட்டது.
அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா பலத்த மூச்சுத்திணறலுடன் மருத்துவருடன் 1 நிமிடத்திற்கு மேலாக பேசும் ஆடியோ ஒன்று வெளியிடப்பட்டது. அப்போது பேசிய ஜெயலலிதா “ OH SAD...எதுல ரெக்கார்ட் பண்ணுறீங்க? ” என்று மருத்துவரிடம் கேட்க, அதற்கு அந்த மருத்துவர் “ VLC ரெக்கார்ட்ல மேடம்... அப்ளிகேஷன் டவுன்லோடு பண்றேன்” என பதிலளிக்கிறார். இதனையடுத்து “இப்போ நான் சொல்றது கேக்குதா? அப்போ கூப்பிட்டேன்... ஆனா எடுக்க முடியலனு சொன்னீங்க” என கூறிய ஜெயலலிதா “அய்யோ... அம்மா... நெஞ்சுல விசில் சத்தம் கேட்குது” என்று பதட்டத்துடன் பேசும் ஆடியோ கேட்போர் நெஞ்சை பதற வைத்தது.
மேலும், அவர் பேசும்போது “எல்லாம் ஒண்னு கிடக்க ஒண்ணு பண்றீங்க... நீங்களும் சரியில்ல டாக்டர், எடுக்க முடியலைன்னா விடுங்க’’ என அந்த ஆடியோவில் ஜெயலலிதா பேசுகிறார். இந்த ஆடியோ கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2018 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் தேதி நக்கீரன் தளத்தால் வெளியிடப்பட்டது. அதே நேரத்தில் லீக் ஆன இந்த ஆடியோவால் தமிழகத்தில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. இந்த ஆடியோ அதிமுகவினர் மத்தியிலும், பொதுமக்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.