'தமிழக வெற்றி கழகத்தை தடுத்து நிறுத்துவது திமுகவின் நோக்கம் கிடையாது' என தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ.வேலுவிடம் செய்தியாளர்கள் 'நடிகர் விஜய்யின் திரைப்படத்தை ஆளுங்கட்சி தடுப்பதாக குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகிறது' எனக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், ''அவையெல்லாம் தவறான செய்திகள். நடிகர் விஜய் கட்சி ஆரம்பிக்கிறார் என்று சொல்லும் பொழுது எங்கள் தலைவர் வாழ்த்துகள் சொன்னார். அதேபோல் திரையுலகில் இருந்து இயக்கத்திற்கு வந்து அமைச்சராக இருக்கும் உதயநிதி கூட 'விஜய் எனது நண்பர். அவர் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள்' என தெரிவித்திருந்தார். இந்த மனப்பக்குவத்தில் தான் திமுக இருக்கிறது. அவருடைய கட்சியைத் தடுத்து நிறுத்த வேண்டும் என திமுக எப்போதும் நினைத்தது கிடையாது.
தமிழகத்தில் எத்தனையோ பேர் கட்சி ஆரம்பிக்கிறார்கள். அது ஜனநாயக உரிமை. அவரவர்கள் ஆரம்பிப்பார்கள் அதையெல்லாம் தடுத்து நிறுத்துவது எங்களுடைய நோக்கம் கிடையாது. திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தமிழர்களின் வளர்ச்சிக்காக, தமிழர்களின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்ட இயக்கம். ஆட்சிக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் கிடையாது. தமிழர்கள் எங்கு நன்றாக இருந்தாலும் பாராட்டுவோம். எத்தனையோ கட்சிகள் வந்திருக்கிறது போயிருக்கிறது. ஆனால் இந்தியாவிலேயே பவள விழா கொண்டாடும் ஒரே கட்சி திமுக தான். மற்றவர்கள் யாரையும் பார்த்து நாங்கள் பொறாமைப்பட மாட்டோம், தடுக்க மாட்டோம், வாழ்த்து சொல்வோமே ஒழிய எந்த காலத்திலும் தடுக்க மாட்டோம்'' என்றார்.