இன்று சென்னை அண்ணா அறிவாலய அரங்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ கும்மிடிப்பூண்டி கி.வேணுவின் இல்ல திருமண விழா நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் கலந்து கொண்டு உரையாற்றுகையில், ''மக்களால் போற்றப்படக்கூடிய ஆட்சியாக திமுக இருக்கிறது. ஆனால் மக்களால் ஒதுக்கப்பட்ட பழனிசாமி தன்னுடைய பொறாமை தாங்க முடியாமல் திமுக அரசை பேசிவருகிறார். இப்படியெல்லாம் சாதனைகள் செய்து கொண்டும் மக்களின் உள்ளத்தில் ஆழமாக திமுக பதிந்து கொண்டிருக்கிறது. இன்னமும் இவர்களுடைய செல்வாக்கு வளர்ந்து கொண்டு இருக்கிறதே என்ற பொறாமையின் காரணமாக செல்லாக் காசாக இருக்கக்கூடிய பழனிசாமி திமுக ஆட்சியினுடைய செல்வாக்கு சரிந்து கொண்டிருக்கிறது என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்'' என பேசியிருந்தார்.
இந்நிலையில் சேலம் மாவட்டம் நங்கவள்ளி அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் முதல்வருக்கு பதிலளிக்கும் வகையில் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''நான் கனவுலகில் வாழவில்லை முதல்வர் மு.க.ஸ்டாலின் தான் பகல் கனவு காண்கிறார். குடும்பத்தில் உள்ளவர்கள் பதவிக்கு வர வேண்டும் என்பதற்காக திமுக கூட்டணி அமைகிறது. கலைஞருக்கு பின் ஸ்டாலின் முதலமைச்சரானார். தற்பொழுது உதயநிதி துணை முதல்வர் ஆகியுள்ளார். அதிமுக ஆட்சியின் பொழுது எவ்வளவு திட்டங்கள் நாங்கள் கொண்டு வந்தோம்.
கிராமத்தில் ஒரு பழமொழி இருக்கும் 'பொய்யை பொருந்துகிற மாதிரி சொன்னால் மெய் திருத்திருவென முழிக்குமாம்' அதுபோல் மு.க.ஸ்டாலினும் அவர் தலைமையில் இருக்கும் அமைச்சர்களும் வேண்டுமென்றே திட்டமிட்டு திமுகவுக்கு செல்வாக்கு இருப்பதைப்போல ஒரு பொய்யான தோற்றத்தை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் உண்மை. நம் நங்கவள்ளி ஒன்றியத்தில் மேச்சேரி-நங்கவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் கொண்டு வந்து எங்கெங்கெல்லாம் மக்கள் குடிநீர் பிரச்சனை இருக்கிறது என்று தெரிவித்தார்களோ அந்த இடத்தையெல்லாம் தேர்வு செய்து மேல்நிலைத் தொட்டிகள் கட்டி காவிரியில் இருந்து பாதுகாக்கப்பட்ட தண்ணீரை கொடுத்த அரசு அதிமுக அரசு.
வறட்சியாக உள்ள ஏரிகளில் எல்லாம் தண்ணீர் இருக்க வேண்டும் என்பதற்காக நூறு ஏரிகளில் நீர் நிரப்புகின்ற பிரம்மாண்டமான திட்டத்தை கொண்டு வந்தோம். இப்பொழுது பணிகள் முறையாக நடைபெறவில்லை. பலமுறை சட்டமன்றத்தில் பேசினேன். செவிடன் காதில் ஊதிய சங்கை போல் உள்ளது இந்த முதல்வருக்கு. கண்டுகொள்ளவே இல்லை. ஆட்சி வரும் போகும் ஆனால் மக்கள் பணி என்பது நிரந்தரமானது''என பேசியுள்ளார்.