அண்ணா பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட இணை பொறியியல் கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதில் மிகப்பெரிய மோசடி நடைபெற்ற இருப்பதாக அறப்போர் இயக்கம் வெளிக்காட்டி இருந்தது. இந்த விவகாரம் தொடர்பாக விரிவாகப் பதிலளிக்க அண்ணா பல்கலைக்கழகத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆகியோர் உத்தரவிட்டிருந்தார்கள்.
அண்ணா பல்கலைக்கழகம் இந்த மோசடி தொடர்பாக எந்தெந்த கல்லூரிகள் மோசடியில் ஈடுபட்டுள்ளது; எத்தனை பேராசிரியர்கள் இதில் சம்பந்தப்பட்டுள்ளார்கள் என்பது தொடர்பாக விரிவான அறிக்கையை ஆளுநரிடம் நேரடியாக சமர்பித்திருந்தது. இந்நிலையில் அந்த அறிக்கை அடிப்படையில் தமிழக ஆளுநர் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் சம்பந்தப்பட்ட கல்லூரிகள், பேராசிரியர்கள் மீது விரிவாக விளக்கம் அளிப்பதற்கு கல்லூரிகளுக்கு நோட்டீஸ் அனுப்புங்கள் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்னும் ஒரு சில நாட்களில் நேரடியாக முறைகேட்டில் ஈடுபட்ட பேராசிரியர்களை அழைத்து விசாரணையில் ஈடுபடுத்த அண்ணா பல்கலைக்கழகம் முடிவு எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் இன்று மதியம் உத்தரவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் தன்னுடைய பெயரில் பல்வேறு வாட்ஸ் அப் குழுக்கள் மூலம் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனுடைய உண்மைத்தன்மையை இணை பொறியில் கல்லூரிகள் நேரடியாக ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்திருக்கும் நிலையில் ஆளுநரின் இந்த உத்தரவின் பேரில் முறைகேட்டில் ஈடுபட்ட கல்லூரிகளுக்கு தற்போது அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் நோட்டீஸ் பறந்துள்ளது.