Skip to main content

தேர்வு எழுதவந்த இஸ்லாமிய பெண்; ஹுஜாப்பை கழட்டச் சொன்ன தேர்வு கண்காணிப்பாளர் 

Published on 21/08/2023 | Edited on 21/08/2023

 

The invigilator says muslim women to remove the hijab in exam hall

 

கர்நாடகா மாநிலத்தில் கடந்த ஆண்டு பா.ஜ.க ஆட்சியின் போது, உடுப்பி மாவட்டத்தின் ஒரு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டது. இதனை எதிர்த்து மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. பிறகு இந்த விவகாரம் நீதிமன்றத்திற்குச் சென்று, தற்போது வழக்கு நிலுவையில் உள்ளது.

 

அதனைத் தொடர்ந்து கர்நாடகா சம்பவத்தை போல் மும்பையில் உள்ள தனியார் கல்லூரியிலும் அரங்கேறியது. அந்த கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு மாற்றங்கள் செய்யப்பட்டதாக அந்த கல்லூரி நிர்வாகம் தெரிவித்திருந்தது.. இதனால், அங்கு படிக்கும் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரத் தடை விதித்திருந்தன. இதையடுத்து, இஸ்லாமிய மாணவிகள் கல்லூரி வாசல் முன் நின்று போராட்டம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

 

இந்த நிலையில்,  திருவண்ணாமலையில் உள்ள தனியார் பள்ளியில் இந்தி தேர்வு எழுத வந்த மாணவிகளை ஹிஜாப் அணிய கூடாது என தேர்வு கண்காணிப்பாளர் கூறியதாக சொல்லப்படுகிறது. மத்திய அரசின் அங்கீகாரத்துடன் செயல்பட்டு வரும் தக்‌ஷிணா பாரத் இந்தி பிரச்சார சபா எனும் கல்வி நிறுவனம் ஒன்று சென்னையில் இயங்கி வருகிறது. இந்த சபா தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் ஆண்டுதோறும் 2 முறை இந்தி தேர்வுகளை நடத்தி அதற்கான சான்றிதழையும் வழங்கி வருகிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் கடந்த 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் முதல் தேர்வான இந்தி பிரவேசிகா தேர்வு நடத்தப்பட்டது. அடுத்த நிலையான பிராதமிக் தேர்வு நேற்று நடந்தது.

 

அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்திற்கான தேர்வு மையம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த சோபாசிபாடியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த தேர்வை எழுதுவதற்காக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், கீழ்பெண்ணாத்தூர், செய்யாறு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 540 நபர்கள் இந்த பள்ளிக்கு வந்திருந்தனர். அதன்படி இந்தி முதல் தாள் தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கியது. இந்த தேர்வை எழுதுவதற்காக தனியார் பள்ளியில் அரபிக் ஆசிரியராக பணிபுரியும் ஷபானா(30 ) என்ற இஸ்லாமிய பெண் ஹிஜாப் அணிந்து வந்திருந்தார்.  தேர்வு தொடங்கி சுமார் 10 நிமிடங்கள் கடந்த நிலையில் அங்கு அறையை பார்வையிட வந்த தேர்வு கண்காணிப்பாளர், ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதிய ஷபானாவை பார்த்துள்ளார்.

 

மேலும் தேர்வு கண்காணிப்பாளர் ஷபானாவிடம்,  ‘ஹிஜாப் அணிந்து தேர்வு எழுதக்கூடாது, ஹிஜாப்பை கழட்டுங்கள்’  என்று கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஷபானா, தேர்வு கண்காணிப்பாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, ஹிஜாப்பை கழற்ற மறுத்ததாக கூறி அவர் தேர்வறையில் இருந்து வெளியேற்றப்பட்டார்.  இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்.டி.பி.ஐ  மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  கட்சியின் நிர்வாகிகள் பள்ளிக்கு சென்று ஷபானா வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இதையடுத்து, திருவண்ணாமலை காவல்துறையினர் விரைந்து வந்து தேர்வு எழுத வந்த ஷபானாவிடமும், பள்ளி நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதன் பிறகு ஷபானா தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டார். இருப்பினும், ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டதால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும், தொடர்ந்து தேர்வு எழுத விரும்பவில்லை என்று ஷபானா கூறினார். மேலும், இதனை சட்டபூர்வமாக எதிர்கொள்ள இருப்பதாக எழுதி கொடுத்துவிட்டு ஷபானா தேர்வு மையத்தில் இருந்து வெளியே சென்றார். இந்த சம்பவம் சிறிது நேரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. 

 

 

சார்ந்த செய்திகள்