கொத்தமங்கலத்திற்கு துக்க நிகழ்ச்சிக்கு உறவினர்கள் சென்ற சரக்கு ஆட்டோ கவிழ்ந்து 15 பேர் படுகாயமடைந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் மையத்தில் கடந்த வாரம் ஒரு பெண் பிரசவம் நடந்த பிறகு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அந்த பெண்ணின் எட்டாம் நாள் சடங்கு துக்க நிகழ்ச்சிக்காக பல கிராமங்களில் இருந்து உறவினர்கள் ஏராளமானோர் சென்றனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஆயிங்குடி கிராமத்தில் இருந்து சுமார் 30 பேர் ஒரு சரக்கு ஆட்டோவில் சென்றுள்ளனர். அந்த ஆட்டோ கொத்தமங்கலம் கிழக்கு பகுதியில் சென்று கொண்டிருந்த போது நிலை தடுமாறி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளததில் கவிந்தது.
சரக்கு ஆட்டோ கவிந்து அதிலிருந்த பெண்கள் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்து வந்த பொதுமக்கள் அவர்களை மீட்டு காயமடைந்த ஆயிங்குடி கிராமத்தைச் செர்ந்த கௌரி (40), காசியம்மாள்(69), மருதம்மாள் (65), பொன்னம்மாள் (55), நாகம்மாள் (60), ஜெயந்தி, ரஞ்சிதம் (70), நவமணி (50), சுலோச்சனா (40), பொண்ணுகண்ணு (65) உள்பட 15 பேரை 108 ஆம்புலன்ஸ் மூலம் கீரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதரா நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பலரை அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து கீரமங்கலம் போலிசார் விசாரனை செய்து வருகின்றனர். துக்க நிகழ்ச்சிக்கு சென்றவர்கள் விபத்திற்குள்ளாகி காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.