'சரபங்கா திட்டத்தை தொடக்கி வைத்துவிட்டு எடப்பாடி அம்போன்னு போயிட்டார்' என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் விமர்சித்துள்ளார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது சரபங்கா திட்டம் நிறைவேற்றப்பட்டதாக இபிஎஸ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளதாக செய்தியாளர்கள் கேள்வியை முன்வைத்தனர். அதற்கு பதிலளித்த துரைமுருகன், ''அவருக்கு தெரியாததல்ல.. சரபங்கா திட்டத்தை ஆரம்பிச்சு வெச்சுட்டு அம்போன்னு விட்டுவிட்டு போயிட்டார். அதன் பிறகு நாங்கள் வந்துதான் அதை முழுதாக முடித்திருக்கிறோம். கடைசியில் கொஞ்சம் ஏரிகள் இருக்கிறது. அதற்கு காரணம் தண்ணீர் போகும் இடத்திற்கு நடுவில் பிரைவேட் லேண்ட் இருக்கு. அவர்கள் கொடுக்க மாட்டேன் என்கிறார்கள். அதைத் தவிர மற்றபடி ஏற்கனவே இதை ஆரம்பித்து மற்ற ஏரிகளுக்கெல்லாம் இந்த திட்டத்தின் மூலம் தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. சரபங்கா அவருடைய ஊருக்கு பக்கம்தான் போய் பார்த்துவிட்டு வரலாம். மழைக்காலங்களில் பெருக்கெடுத்து வரும் உபரி நீரைத்தான் சரபங்கா திட்டத்திற்கு பயன்படுத்தி வருகிறோம்; அத்திக்கடவு அவினாசி திட்டத்திற்கு பயன்படுத்துகிறோம். அதேபோன்று ஆங்காங்கே வழியில் நீரேற்று நிலையங்கள் அமைத்து அங்கிருந்து பாசனத்திற்கு எடுத்து செல்கிறார்கள். ஆகையால் எல்லா வகையிலும் மிகை நீரை கடலுக்கு போகாமல் தடுத்து நிறுத்தி விவசாயத்திற்கு, தொழிலுக்கு பயன்படும் வகையிலான திட்டங்களை அரசு வேகமாக செய்து கொண்டிருக்கிறது'' என்றார்.
'மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்' என்ற கேள்விக்கு ''வருகின்ற தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள். அவரவர்கள் நிலத்தில் பாசன நீரை பயன்படுத்தி பயிர்களை வளர வைக்க வேண்டும்'' என்றார்.
Published on 31/07/2024 | Edited on 31/07/2024