கடந்த 2017ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியின் போது தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைவதற்கு முன்பு குட்காவுடன் வந்து அப்போதைய எதிர்க்கட்சித் தலைவரும், தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள், ‘தமிழகம் முழுவதும் குட்கா விற்பனை அதிகரித்துள்ளது’ எனக் குறி முழக்கம் எழுப்பினர். இந்த விவகாரம் குறித்தும், சட்டப்பேரவைக்குள் குட்கா கொண்டு வந்ததாக தெரிவித்தும் சட்டப்பேரவை உரிமைக்குழு சார்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனையடுத்து சட்டப்பேரவை உரிமைக்குழு சார்பில் நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பப்பட்ட நோட்டீஸை எதிர்த்தும் ரத்து செய்யக்கோரியும் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு நோட்டீஸில் தவறுகள் இருந்தால் அதனை திருத்தி அனுப்பலாம். ஆனால் நோட்டீஸை ரத்து செய்ய முடியாது எனத் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து உரிமைக்குழு சார்பில் இரண்டாவது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதனை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 18 திமுக எம்எல்ஏக்கள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நோட்டீஸை ரத்து செய்வதாக அறிவித்தது. அதே சமயம் இந்த நோட்டீஸை அனுப்பியதை ரத்து செய்ய முடியாது எனக் கூறி சட்டப்பேரவை உரிமைக்குழு மற்றும் சட்டப்பேரவை செயலாளர் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சி.குமரப்பன் அமர்வில் விரிவான விசாரணை நடைபெற்றது. இந்நிலையில் இந்த வழக்கில் இன்று (31.07.2024) தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவில், “உரிமைக்குழு சார்பில் அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. எனவே இந்த நோட்டீஸ் தொடர்பாக சபாநாயகர் மீண்டும் உரிமை மீறல் குழுவை உடனடியாக கூட்டி இது தொடர்பாக விளக்கம் கேட்க வேண்டும். உரிமை மீறல் குழு சட்டமன்ற விதியின் படி விசாரணையை முடித்து இது தொடர்பாக முடிவெடுக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.