கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காமராஜர் கல்வி குழுமம் சார்பில் "மாறிவரும் உலகமும் - இந்தியாவும் அதில் தமிழர்களுக்கான சவால்களும் வாய்ப்புகளும்" என்ற மாணவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாரிமுத்து சீனிவாசன் தலைமை வகித்து பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக கத்தார் நாட்டின் தோஹா வங்கி முன்னாள் தலைவர் ஆர்.சீத்தாராமன் பங்கேற்றுச் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் மாணவர்கள், தாங்கள் வளர்ச்சி பெற வேண்டும் என்றால் எவ்வாறு வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும். கொரோனாவிற்கு பிறகு இந்தியா பொருளாதாரத்தை வளர்ச்சியடைய செய்துள்ளது. மேலும் உலகளவில் பொருளாதாரத்தில் 5 வது இடத்திலிருந்த இந்தியா 3 வது இடத்திற்கு செல்லும் சாத்தியக்கூறுகள் உள்ளது. இந்தியாவில் இளைஞர்கள் மிகப்பெரிய சக்தியாக திகழ்கிறார்கள். உலகளவில் அனைத்து துறைகளுக்கும் இந்தியா அச்சாணியாக திகழ்கிறது. இந்தியா வளர்ச்சி பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட 110 விமான நிலையங்கள் வர உள்ளது. வளர்ச்சிக்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது, வேலைவாய்ப்புகள் அதிகளவில் வரவுள்ளது” என்றார்.
கருத்தரங்கில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி பங்கேற்று வாழ்த்துரையாற்றினார். இதனை தொடர்ந்து தொழிலதிபர் பி.பி.கே.சித்தார்த்தன், காங்கிரஸ் கட்சி மாவட்டத் தலைவர் என்,வி.செந்தில்நாதன், நகரமன்ற உறுப்பினர் தில்லை ஆர்.மக்கீன், தெய்வீக பக்தர் பேரவை ஜெமினி எம்.என்.ராதா மற்றும் கருத்தரங்கில் காமராஜ் கல்வி குழும பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.