பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் இரண்டாவது நாளாக இன்றும் சோதனை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலையில் உள்ள அமைச்சர் எ.வ. வேலுக்குச் சொந்தமான கல்வி நிறுவனங்கள் மற்றும் வீடுகளிலும், சென்னையில் அமைச்சருக்கு நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்களிலும், கோவையில் அமைச்சருக்கு நெருக்கமானவர் என அறியப்படும் தி.மு.க. நிர்வாகியான மீனா ஜெயக்குமார் வீடு மற்றும் அலுவலகங்களிலும் சோதனை நடந்து வருகிறது.
அதேபோல், சென்னை தி.நகரிலுள்ள ரெசிடென்சி டவர் ஹோட்டல், புரசைவாக்கம் மேகலா திரையரங்கு அமைந்திருக்கும் சாலையில் நெடுஞ்சாலைத்துறையின் பொருட்களை விநியோகம் செய்யும் அமித் என்பவரின் வீடு மற்றும் சென்னை வேப்பேரியில் உள்ள ஓசியன் ஒன் என்ற அடுக்குமாடிக் குடியிருப்பு ஆகிய பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும், அப்பாசாமி ரியல் எஸ்டே நிறுவனத்திற்குச் சொந்தமான இடங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், இதில் சில இடங்களில் இரண்டாவது நாளாக இன்றும் வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை 7 மணி அளவில் அமைச்சருக்குச் சொந்தமான இடங்களில் எல்லாம் சோதனையைத் துவங்கியது வருமானவரித் துறை. இதில், சென்னை தி.நகரிலுள்ள ரெசிடென்சி டவர் ஹோட்டலில் சோதனை நடத்திய இரு அதிகாரிகள், சோதனை நடைபெற்ற தினமான 3ம் தேதிக்கு முன்தினமே அதாவது 2ம் தேதியே அந்த ஹோட்டலில் சுற்றுலாப் பயணிகள் எனக் கூறி அறை எடுத்துத் தங்கியுள்ளனர். மேலும், ஒரு நாள் முழுக்க அந்த ஹோட்டலில் என்ன நடக்கிறது எனக் கண்காணித்துள்ளனர். மறுநாள்(3ம் தேதி) காலை 7 மணிக்கு ஹோட்டலின் வரவேற்பறைக்கு வந்த இரு அதிகாரிகளும், தாங்கள் வருமான வரித்துறையினர் என்று கூறி தங்களது அடையாள அட்டையைக் காண்பித்து பின் சோதனையைத் துவக்கியுள்ளனர். இது தற்போது பேசு பொருளாகியுள்ளது.