அதிமுகவின் புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்து வருபவர் இளங்கோவன். இவர் திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள எம். புதுப்பட்டியில் செயல்பட்டு வரும் எம்.ஐ.டி. கல்வி நிறுவனத்தின் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார். கடந்த 10 ஆண்டுகளாகச் செயல்படும் இந்த கல்வி நிறுவனத்தில் வளாகத்தில் பாலிடெக்னிக் கல்லூரி, வேளாண் தொழில்நுட்ப கல்லூரி, மகளிர் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் தான் நேற்று (22.10.2024) காலை 8 மணி முதல் இந்த கல்வி நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் 30 மணி நேரத்திற்கும் மேலாகச் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மற்றும் திருச்சியில் இருந்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையை மேற்கொண்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு செய்ததாக எழுந்த புகார் தொடர்பாக வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருவதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த கல்வி நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது. இந்த கல்வி நிறுவனத்தின் தலைவராகச் செயல்பட்டு வரும் இளங்கோவன் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு மிகவும் நெருக்கமானவர் ஆவார்.
அதே சமயம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.எல்.ஏ விடுதியில் அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் அறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆறு பேர் சோதனையில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. எம்.எல்.ஏ. விடுதி நிர்வாகத்திடம் வைத்திலிங்கம் தங்கியிருந்த அறையின் சாவியை வாங்கி திறந்து அவருடைய அறை சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதேநேரம் வைத்திலிங்கம் தொடர்பான மற்ற இடங்களிலும் சோதனை நீட்டிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.