Published on 14/03/2024 | Edited on 14/03/2024

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
தற்போதே கோடை காலத்திற்கான வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பாக தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி நாளை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.