கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து 4 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. சிகிச்சையில் இருப்பவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து வருகின்றனர். இதனால் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு கள்ளக்குறிச்சி, சேலம் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தை கண்டித்தும். இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்று முதல்வர் பதவி விலக வேண்டும் என்றும், உண்மை குற்றவாளிகளைக் கைது செய்ய கோரியும் வேலூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற இருந்தது. இதற்கு காவல்துறை அனுமதி வழங்காததால் போராட்டத்தில் ஈடுபட வந்த பாஜகவினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரை வேட்டியுடன் வந்தவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ய அழைத்தபோது, 'நான் இல்லை என்னை விடுங்க.. நான் போறேன்...' என வாகனத்தில் ஏறாமல் ஒருவர் அடம் பிடித்தார். வேட்டியுடன் ஆர்ப்பாட்டத்திற்கு வந்தவர் கைது எனக் காவல்துறை அழைத்தவுடன் கூச்சலிட்டு கதறிய முதியவரால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.