தனது சந்தோஷத்துக்கு கணவன் இடையூறாக இருந்ததால் காதலன் மூலம் அவரை கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் அருகே திருப்பத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜ்குமார். திருப்பத்தூர் நகராட்சி குத்தகை சைக்கிள் ஸ்டாண்ட்டில் வேலை செய்து வந்தார். ராஜ்குமாருக்கு திருமணமாகி கவுசல்யா (28) என்ற மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த 11-ந் தேதி திருப்பத்தூர் அடுத்த பெரிய குனிச்சி பகுதியில் உள்ள கோவிந்தன் என்பவர் வீட்டின் அருகே ராஜ்குமார் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.
இதனை அறிந்த ராஜ்குமார் மனைவி கவுசல்யா, ராஜ்குமார் தந்தை மகேந்திரகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று கதறி அழுதனர். இனி இரண்டு பிள்ளைகளை எப்படி காப்பாற்றுவேன் என்று கவுசல்யா கதறினார். கொலை சம்பவம் நடந்த அன்று அதே பகுதியை சேர்ந்த துளசிராமன், லாரி டிரைவர் ரமேஷ் மற்றும் சிலருடன் ராஜ்குமார் பேசி கொண்டிருந்ததை சிலர் பார்த்துள்ளனர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் ரமேசை தேடி சென்றனர். அப்போது அவர் தலைமறைவானார். ரமேஷ் நண்பர்களை போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். அப்போது ரமேசுக்கும், கவுசல்யாவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததை போலீசார் கண்டு பிடித்தனர். இதனையடுத்து கவுசல்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ராஜ்குமார் பகலில் வேலைக்கு சென்றவுடன், ரமேசுடன் நட்பு ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியதை அவர் ஒப்புக்கொண்டார்.
தாங்கள் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்திப்பதும், அடிக்கடி போனில் பேசுவதும் ராஜ்குமாருக்கு தெரியவந்தது. இதனை தனது கணவர் கண்டித்துள்ளார். இதனால் இருவரும் சந்திக்க முடியவில்லை. கணவன் உயிரோடு இருந்தால் ரமேஷை சந்திக்க முடியாது எனவே கணவனை தீர்த்து கட்ட முடிவு செய்து ராஜ்குமாரை கொலை செய்து விடுமாறு ரமேஷிடம் கூறியுள்ளார். அதன்படி ரமேஷ் தனது நண்பர்கள் மூலம் கொலை செய்ய திட்டமிட்டுள்ளான். ராஜ்குமாருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், சம்பவத்தன்று அளவுக்கு அதிகமாக மது அருந்த வைத்து கொலை செய்துள்ளது தெரிய வந்தது. போலீசார் தனிப்படை அமைத்து ரமேஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை கைது செய்தனர். கவுசல்யா, ரமேஷ், துளசிராமன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்கள் மூன்று பேரிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.