விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் வட்டம், மரக்காணம் ஒன்றியத்தில் உள்ளது சிறுவாடி ஊராட்சி. அக்கிராமத்தின் அவல நிலை கண்டுகொள்ளாத மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலர் மீது சிறுவாடி கிராம பொதுமக்கள் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
மரக்காணம் ஒன்றியத்தில் உள்ள சிறுவாடி ஊராட்சியில் 2,500 குடும்பங்கள் வசிக்கின்றனர். இதில் அனைவரும் விவசாய குடும்பங்கள். இதில் மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் 100 குடும்பங்களுக்கு தினந்தோறும் காலை மாலை என குழாயின் மூலம் தண்ணீர் பிடிப்பது வழக்கம். கடந்த சில மாதங்களாக குடிநீர் தண்ணீர் வருவதில்லை. இதனால் இந்த மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் குடும்பங்கள் தினந்தோறும் காலை மாலை என தண்ணீருக்கு கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள அனைத்து குடிநீர் பிடிக்கும் குழாய்களில் பைப் டேப்கள் உடைந்துள்ளன. இதனால் தண்ணீர் வீணாகி செல்கின்றன. இதனால் தண்ணீர் தெருக்களிலும் அங்குள்ள பள்ளத்திலும் குட்டைகளிலும் தேங்கி நிற்கின்றன.
இதில் தேங்கி நிற்கும் மழை நீரும் கழிவு நீரும் தேங்கி நிற்பதனால் துர்நாற்றம் வீசுகிறது. அதில் கொசு உற்பத்தியாகி அப்பகுதியில் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. இதனால் தொற்றுநோய், மர்ம காய்ச்சல், வாந்தி, பேதி, மயக்கம், மலேரியா, சிக்கன் குனியா, டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு அருகில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வருகின்றனர். எப்படித்தான் வாழ்வது என குமுறும் அப்பகுதி மக்கள் இதுகுறித்து கிராமத்தின் சார்பில் பொதுமக்கள் மரக்காணம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசனிடம் புகார் கொடுத்தார்கள். அந்தப் புகாரின் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை நேரிலும் சந்தித்து பேசியும் நடவடிக்கை இல்லை. இதனால் மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று மாரியம்மன் கோவில் தெருவை பார்வையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.