கோவை சரக தொழிலதிபர்கள் இடையேயான ஆலோசனைக் கூட்டம் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பரவிய வதந்திகள் பொய் செய்திகளை நல்ல முறையில் கையாண்ட தொழிலதிபர்களுக்கு பாராட்டுகள். இப்பொழுது நிலைமை சீராக உள்ளது என்றாலும் நாம் தொடர்ந்து கண்காணிக்க வேண்டி இருக்கிறது. ஏனென்றால் பொய்யான வதந்திகள் தொடர்ந்து பரவுகிறது. அவர்கள் மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலரை கைது செய்ய நமது காவல்துறையினர் வெளி மாநிலங்களில் முகாமிட்டுள்ளனர். தற்போது வரை 11 வழக்குப் பதிவுகள் செய்துள்ளோம். யார் செய்தார்கள், அவர்களது நோக்கம் என்ன என்பதெல்லாம் புலன் விசாரணையில் தெரிய வரும். அதிகமானோர் மீது வழக்குகளை பதிவு செய்துள்ளோம். அதில் சிலருக்கு சில அரசியல் கட்சிகளுடன் தொடர்பு உள்ளது. புலன் விசாரணையின் இறுதியில் தகவல்களை கொடுக்கிறோம்.
செல்போனில் இணைய வசதி இருந்தால் உலகில் உள்ள மக்களில் யார் வேண்டுமானாலும் உங்களை தொடர்பு கொள்ளலாம். யார் வேண்டுமானாலும் ஒரு பொய் சொல்லி உங்களை நம்ப வைத்து உங்கள் வங்கிகளில் உள்ள பணத்தை ஒட்டு மொத்தமாக எடுத்து செல்லலாம். கூகுள் பேயில் உங்களது கணக்கில் 100 ரூபாயோ 5000 ரூபாயோ போடலாம். அப்பொழுது நீங்களே ஆச்சரியப்படுவீர்கள். நம் கணக்கிற்கு எப்படி இவ்வளவு பணம் வந்தது என்று. அப்பொழுது ஒரு அழைப்பு வரும். இந்த பணத்தை தெரியாமல் போட்டுவிட்டேன் என்று. நான் ஒரு லிங்க் அனுப்புகிறேன். அதில் பணத்தை திருப்பி கொடுங்கள் என்று சொல்வார்கள். யார் லிங்க் அனுப்பினாலும் அதில் எந்த தகவலையும் கொடுக்காதீர்கள். உங்களுக்கு ஓடிபி வந்து அதை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் என்றால் அதை லிங்க் அனுப்பியவர் மொத்தமாக எடுத்துச் சென்று விடுவார்.
யாராவது உங்களுக்கு பணம் அனுப்பினாலோ அல்லது வங்கிக் கணக்கில் பணம் போட்டாலோ நீங்கள் அதை சட்டை செய்யாதீர்கள். அந்த நபரை ப்ளாக் செய்யுங்கள். காவல் நிலையத்திற்கு சொல்லுங்கள். அந்த நபர் ஒரு குற்றவாளி. இன்று வீட்டையெல்லாம் உடைத்து திருடுவது கிடையாது. அதற்கான தேவையும் இல்லை. உங்கள் வங்கிகளில் இருக்கும் பணத்தை சர்வ சாதாரணமாக எடுத்து விடுவார்கள்” எனக் கூறினார்.