கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட சின்ன ஏலசகிரி பகுதியில் அம்பேத்கர் நகர் அமைந்துள்ளது. கடந்த 5 நாட்களுக்கு முன்னர் மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்ட குடிநீரைப் அப்பகுதி மக்கள் அருந்தியுள்ளனர். இந்தக் குடிநீரை அருந்தியவர்களுக்குக் காய்ச்சல், வாந்தி, பேதி, மயக்கம் உள்ளிட்ட உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டன. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையிலும், சிலர் தனியார் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து ஓசூர் சார் ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், மேயர், எம்.எல்.ஏ., எம்.பி. உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இப்பகுதி மக்களுக்கு அருகில் உள்ள சாந்தபுரம் ஏரியில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு, அதன் மூலம் குடிநீர் கொண்டு வரப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் சேகரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில்தான் குடிநீரில் கழிவுநீர் கலந்ததால் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் கழிவுநீர் கலந்தது உறுதியானது. அதனைத் தொடர்ந்து குழாய் ஆய்வாளர் சீனிவாசன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக பிறப்பிக்கபட்டுள்ள உத்தரவில், பணியில் அலட்சியமாகவும், கவனக்குறைவாகவும் செயல்பட்டதாக ஆய்வாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்த 80 பேருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல் நலப் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.