நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.
அதன்படி அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மதுரையில் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து முக்குலத்தோர் புலிப்படை இயக்கத்தின் தலைவர் கருணாஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசுகையில், ''தமிழ்நாட்டுக்காரர்கள் கேனையர்கள் கிடையாது. மக்கள் மீது அதிகாரத்தை திணிப்பது தான் பாஜகவின் அரசியல். சமூக நீதி மறுப்பதுதான் சனாதனம். தமிழ்நாட்டில் சமூக நீதி என்ற ஒன்று இருக்கிறது அல்லவா? அது எங்கெல்லாம் மறுக்கப்படுகிறதோ அதுதான் சனாதனம். ஆண்டாண்டு காலமாக கீழடியில் நமது வரலாற்றை பார்க்கும் பொழுது பெருமையாக இருக்கிறது. அப்படிப்பட்ட நம் தாய்மொழி தமிழ் மொழி திட்டமிட்டு பாஜகவால் அழிக்கப்படுகிறது. மக்களுக்கான எந்தச் செயலையும் செய்யாமல் தினமும் 10 பொய்களைப் பேச வேண்டும் என்பது பிரதமரின் செயல்பாடு அவருடைய திட்டம்'' என்றார்.