தமிழக காவல்துறை சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் டி.எஸ்.பி.யாக காதர் பாட்ஷா செயல்பட்டபோது சிலை கடத்தல் மன்னன் என்று சொல்லக்கூடிய சுபாஷ் கபூரை சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அச்சமயத்தில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்குப் பொன். மாணிக்கவேலைச் சிறப்பு அதிகாரியாக நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாகப் பொன். மாணிக்கவேல் செயல்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அச்சமயத்தில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை அதிகாரியாக இருந்த காதர் பாட்ஷா மீதே பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தார்.
இத்தகைய சூழலில் தான் காதர் பாஷா தனது கைது சம்பவத்தைக் குறிப்பிட்டு, பொன். மாணிக்கவேல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தார். இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு புகார் அனுப்பப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பொன். மாணிக்கவேலுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி அவர் மீது சி.பி.ஐ. 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொன். மாணிக்கவேல், “இந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் தன்னை கைது செய்யக்கூடாது. எனவே தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கைக் கையாளப்படவில்லை. இந்த வழக்கில் தனக்கு எந்த முகாந்திரமும் இல்லை”எனத் தெரிவித்து வழக்கு தொடர்ந்திருந்தார்.
அப்போது இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, பொன். மாணிக்கவேலுக்கு கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி (30.08.2024) நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டிருந்தார். அதில், ‘பொன். மாணிக்கவேல் 4 வாரங்களுக்குச் சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் தினம்தோறும் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த உத்தரவின்படி பொன். மாணிக்கவேல் சி.பி.ஐ. அலுவலகத்தில் தினம்தோறும் ஆஜராகிக் கையெழுத்திட்டு வருகிறார்.
இந்நிலையில் பொன். மாணிக்கவேல் சி.பி.ஐ. அலுவலகத்தில் தினம்தோறும் ஆஜராகிக் கையெழுத்திடுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று (03.10.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கடந்த 15 நாட்களாகத் தான் பொன். மாணிக்கவேல் சி.பி.ஐ. அலுவலகத்தில் தினம்தோறும் ஆஜராகிக் கையெழுத்திட்டு வருகிறார். ஆனால் நீதிமன்ற நிபந்தனையின்படி 4 வாரங்களுக்கு ஆஜராகிக் கையெழுத்திட வேண்டி உள்ளதால், மீதம் உள்ள இரண்டு வாரங்களுக்கு அவர் கையெழுத்திட வேண்டும்” எனத் தெரிவித்து வழக்கு விசாரணையை அக்டோபர் 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.