தமிழக காவல்துறை சிலை கடத்தல் தடுப்பு பிரிவில் டிஎஸ்பியாக காதர் பாட்ஷா செயல்பட்டபோது சிலை கடத்தல் மன்னன் என்று சொல்லக்கூடிய சுபாஷ் கபூரை சிலை கடத்தல் தொடர்பான வழக்கில் சேர்க்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அச்சமயத்தில் சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவுக்குப் பொன். மாணிக்கவேலை சிறப்பு அதிகாரியாக நியமித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாகப் பொன். மாணிக்கவேல் செயல்பட்டு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். அப்போது சிலை கடத்தல் தடுப்பு பிரிவு விசாரணை அதிகாரியாக இருந்த காதர் பாட்ஷா மீதே பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அதன்பின்னர் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்தார்.
இத்தகைய சூழலில் தான் காதர் பாஷா, பொன். மாணிக்கவேல் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை எழுப்பியிருந்தார். இது தொடர்பாக சி.பி.ஐ.க்கு புகார் அனுப்பப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் பொன்.மாணிக்கவேலுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி அவர் மீது சி.பி.ஐ. 13 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்திருந்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொன். மாணிக்கவேல், “இந்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் தன்னை கைது செய்யக்கூடாது. எனவே தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும். மேலும் நீதிமன்ற உத்தரவுப்படி இந்த வழக்கைக் கையாளப்படவில்லை. இந்த வழக்கில் தனக்கு எந்த முகாந்திரமும் இல்லை”எனத் தெரிவித்து வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று முன்தினம் (28.08.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் வாதிடுகையில், “பொன். மாணிக்கவேலைக் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தால்தான் சிலை கடத்தல் தொடர்பான உண்மைகள் வெளிவரும். காதர் பாட்ஷாவை பொய்யான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ளார். யாரைக் காப்பாற்ற இவர் இவ்வாறு செயல்பட்டார் என்பதைக் கைது செய்து காவலில் எடுத்து விசாரித்தால் தான் சிலை கடத்தலில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியும். எனவே இவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது” என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதி, “பொன். மாணிக்கவேலுக்கும், இந்த சிலை கடத்தல் மன்னனாகப் பார்க்கப்பட்ட சுபாஷ் கபூருக்கு நேரடியாகத் தொடர்புகள் உள்ளதா?. அதற்கான ஆவணங்கள் ஏதேனும் உள்ளதா? எனக் கேள்வி எழுப்பினார். அப்போது சீலிடப்பட்ட கவர் ஒன்றை நீதிபதியிடம் சி.பி.ஐ. தரப்பில் ஒப்படைக்கப்பட்டது. அதில் போதிய விவரங்களும், போதிய முகாந்திரங்களும் உள்ளதாக சி.பி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சீலிடப்பட்ட கவரை முழுமையாகப் படித்துவிட்டு நேற்றைக்கு (29.08.2024) வழக்கு விசாரணையைத் தொடரலாம் என நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்திருந்தார்.
இதனையடுத்து இந்த வழக்கு நேற்று (29.08.2024) மதியம் 02.15 மணியளவில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் மூத்த வழக்கறிஞர் சீனிவாசன் ஆஜராகி வாதிடுகையில், “இந்த வழக்கின் முதற்கட்ட விசாரணையில் பொன். மாணிக்கவேல் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையிலேயே முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த முதல் தகவல் அறிக்கையின் படி பொன். மாணிக்கவேலைக் கைது செய்து விசாரணை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எனவே பொன். மாணிக்கவேலுக்கு முன் ஜாமீன் வழங்கினால் இவர் இந்த வழக்கின் சாட்சிகளைக் கலைக்க நேரிடும். ஆகையால் பொன். மாணிக்கவேலுக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது. அதோடு இந்த முன் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது.
அதே சமயம் மனுதாரர் பொன். மாணிக்கவேல் தரப்பில் வாதிடுகையில், “எங்கள் தரப்பில் எந்த குற்றச்சாட்டும் இல்லை. எனவே முன் ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டனர். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, பொன். மாணிக்கவேல் மீது சி.பி.ஐ.யால் பதியப்பட்ட வழக்குகளின் சட்டப்பிரிவுகளைக் கேட்டறிந்து இந்த வழக்குகள் ஜாமீன் அளிக்கக்கூடிய பிரிவுகளா அல்லது ஜாமீனில் வெளியில் வர முடியாத பிரிவுகளா? எனக் கேட்டறிந்தார். இது தொடர்பான ஆவணங்களை சிபிஐ உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். மேலும் இந்த வழக்கிற்கான தீர்ப்பை இன்றைக்கு (30.08.2024) ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில் சிலை கடத்தல் விவகாரத்தில் சிபிஐயால் பதியப்பட்ட வழக்கில் முன்னாள் ஐஜி பொன். மாணிக்கவேலுக்கு இன்று (30.08.2024) நிபந்தனையுடன் கூடிய முன் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. அதில் பொன். மாணிக்கவேல் 4 வாரங்களுக்குச் சென்னையில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.