
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் உள்ள கிராமத்தில் 70 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் ட்ரம்மில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்டவரின் மனைவியை போலீசார் விசாரித்து வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்துள்ளது ஆலத்தூர். இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர் வளத்திகோவிலான் (70), இவர் வசித்து வந்த வாடகை வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் திருப்போரூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபொழுது, சமையல் அறையில் வைக்கப்பட்டிருந்த ட்ரம்மில் சடலம் ஒன்று இருப்பது தெரியவந்தது.

பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்த அந்த சடலத்தை வெளியே எடுத்துப் பார்த்ததில் அது வளத்திகோவிலான் உடல் என்பது தெரியவந்தது. இதனால், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என யூகித்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் வளத்திகோவிலான் கொலை செய்யப்பட்டுப் பத்து நாட்களுக்கு மேலாகி இருப்பது தெரிய வந்தது.
வளத்திகோவிலானின் மனைவி எழிலரசி. அவருக்கு 50 வயதாகிறது. தனியார் நிறுவனத்தில் துப்புரவுத் தொழிலாளராகப் பணியாற்றி வருகிறார். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்த நிலையில், இந்தக் கொலை நிகழ்ந்துள்ளது. ஆனால், வீட்டில் எழிலரசி இல்லாததால் தனிப்படை அமைத்துப் போலீசார் தேடி வந்தனர். இதில் தலைமறைவாக இருந்த எழிலரசியைப் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.