தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 15ஆம் தேதி (15.10.2024) தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. இத்தகைய சூழலில் தான் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில தினங்களாகக் கனமழை பெய்து வருகிறது. அதன்படி மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (25.10.2024) மதியத்தில் இருந்து பெய்துவரும் கனமழை காரணமாக வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். கனமழை காரணமாக வைகை ஆற்றில் மழைநீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.
மதுரையில் உள்ள சர்வேயர் காலனி, முல்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் மழை வெள்ளம் புகுந்துள்ளது. வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் தங்க இடமில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மதுரையில் இன்று மாலை 3 மணி முதல் 03.15 வரையிலான 15 நிமிடத்தில் 4.5 செ.மீ மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. காலை 08.30 - மாலை 05.30 இடைப்பட்ட 9 மணி நேரத்தில் 9.8 செ.மீ மழை பொழிந்துள்ளது எனத் தகவல் வெளியாகியுள்ளது. அதே சமயம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து அமைச்சர் மூர்த்தி மற்றும் அரசு அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். அப்போது அவர் சீரமைப்புப் பணிகளை விரைந்து மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் முல்லை நகரில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர், சு. வெங்கடேசன் எம்.பி. ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சு, வெங்கடேசன் எம்.பி. பேசுகையில், “மதியம் 03.00 மணி முதல் 03.15 மணி வரையில் ஏறக்குறைய 4.5 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாகப் பதிவாகி உள்ளது. இது மிகவும் எதிர்பாராத, ஏறக்குறைய ஒரு மேக வெடிப்பு போன்றது ஆகும். கடுமையான சூழல் ஏற்பட்டுள்ளது. செல்லூர் கால்வாயில் உள்ள 15 கண்மாய்களும் நிரம்பியுள்ளன. சாத்தியர் பகுதி அணையின் குளங்கள் அனைத்தும் நிரம்பியுள்ளன. வடகிழக்கு பருவமழையின் தூக்கத்திலேயே சவாலான நிலை ஏற்பட்டுள்ளது.
மாவட்ட நிர்வாகம் முழுமையாகக் களத்தில் இறங்கியுள்ளன. தண்ணீரை வடிப்பதற்கான முயற்சிகளும் ஈடுபட்டுள்ளனர். மழை தொடர்ந்து மழை பெய்யாமல் இருந்தால் அடுத்த நான்கு மணி நேரத்தில் மழைநீர் வைகை ஆற்றில் பயிற்சி ஆற்றில் செல்வதற்கான வழிவகை செய்யப்படும். 15 குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. நான்கு இடங்களில் பொதுமக்களைத் தங்குவதற்காக ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அங்கு உணவு தயாரிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது” எனத் தெரிவித்தார்.