தஞ்சாவூர் மாவட்டம் பாப்பநாடு கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முத்துகுமரன் என்ற கணித ஆசிரியர் வேலைப் பார்த்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் பள்ளியில் படிக்கும் 43 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு புகார் எழுந்தது.
இதுகுறித்து கடந்த மாதம் 12 ஆம் தேதி பள்ளியில் படிக்கும் மாணவிகளில் பெற்றோர்கள் சிலர் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பிற்கு தொலைப்பேசி மூலம் தகவல் கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து பாப்பநாடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் ஆசிரியர் முத்துகுமரன் 43 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்திருப்பது உறுதியானது.
இதனைத் தொடர்ந்து இந்த புகார் தொடர்பான விசாரணை அறிக்கை முதன்மை கல்வி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், முத்துகுமரன் அதிரடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ஆனால், அவர் மீது கல்வித்துறை சார்பில் எந்த புகாரும் அளிக்கப்படாததால், வழக்குப் பதியவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்கள் பள்ளி முன்பு போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் குழந்தை பாதுகாப்பு மைய அலுவலர் ஒருவர் ஆசிரியர் முத்துகுமரன் மீது ஒரத்தநாடு அனைத்து மகளி காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அதன் பேரில் போக்சோ வழக்குப் பதிவு செய்த போலீசார், ஆசிரியர் முத்துகுமரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளியில் ஆசிரியர் ஒருவரே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.