Skip to main content

அரசுப் பள்ளிக்கும் விடுதிக்கும் 4 கி.மீ இடைவெளி; மதிய உணவு சாப்பிடத் தவிக்கும் மாணவர்கள்!

Published on 26/07/2024 | Edited on 26/07/2024
govt school and the hostel are 4 km away, so  students are in trouble

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான மாணவர்கள் அரசு மாணவர் விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். பேருந்து நிலையம் அருகில் பள்ளி செயல்படுகிறது. ஆனால் 2 கி.மீ தூரத்தில் திருமணஞ்சேரி நுழைவாயில் அருகே மாணவர் விடுதி செயல்படுவதால் காலை உணவு சாப்பிட்டு விட்டு 2 கி.மீ நடந்து செல்கிறார்கள்.

அதே போல மதியம் உணவிற்காக ஒரு மணி நேரத்தில் 2 கி.மீ நடந்து வந்து விடுதியில் சாப்பிட்டுவிட்டு மீண்டும் பள்ளிக்கு நடந்து செல்ல வேண்டியுள்ளது. அதனால் மதிய உணவுக்காக பள்ளிவிடும் போது வேகமாக சாலைக்கு ஓடி வரும் மாணவர்கள் கடைவீதியில் ஆங்காங்கே வரிசையாக நின்று கொண்டு அந்த வழியாகச் செல்லும் இருசக்கர வாகனங்களை நிறுத்தி லிப்ட் கேட்டு ஏறிச் செல்வது வேதனையாக உள்ளது. பல நேரங்களில் நீண்ட நேரம் எந்த வாகனமும் கிடைக்காமல் பள்ளிக்கே திரும்பும் மாணவர்களும் உண்டு. அதே போல லிப்ட் கேட்டு விடுதிக்கு போன மாணவர்கள் சாப்பிட்டுவிட்டு மறுபடி பள்ளிக்கு ஓட்டமும் நடையுமாக வர வேண்டியுள்ளது. இதனை நினைத்து பலர் மதிய உணவையே துறந்துவிடுகின்றனர்.

ஆகவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி மதிய நேரத்தில் அந்த வழியாக ஒரு நகரப் பேருந்து இயக்கினால் மாணவர்கள் நிம்மதியாக சாப்பிடவும் முடியும், சாலையில் நின்று போவோர் வருவோரிடம் லிப்ட் கேட்கவும் வேண்டியதில்லை. பல மாணவர்களின் பட்டினியைப் போக்கலாம் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.

சார்ந்த செய்திகள்