திருச்சி மாவட்டத்தில் மருது சகோதரர்களின் நினைவு நாள் நிகழ்ச்சி நேற்று முன்தினம் (23-10-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “தமிழகத்தில் ஆரியம், திராவிடம் என ஒன்று கிடையாது. இந்தியாவை பிரித்தாளும் கொள்கைக்காவே கால்டுவெல் போன்றோர்கள் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சுதந்திர தினத்தை கருப்பு நாள் என்று கூறியவர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். சுதந்திரத்திற்கு போராடிய மருது சகோதரர்களும், முத்துராமலிங்க தேவர் ஆகியோரும் வெறும் சாதித் தலைவர்களாக கருதப்படுகின்றனர்.
காந்தி, சுபாஷ் சந்திர போஸ், பகத் சிங் உள்ளிட்டோர் தமிழகத்தில் பிறந்திருந்தால் அவர்களையும் சாதி சங்க தலைவர்களாக மாற்றியிருப்பார்கள். தியாகிகளை சாதி தலைவர்களாக அடையாளப்படுத்தி மக்களை ஒன்று சேர விடாமல் தடுக்கின்றனர்” என்று கூறி இருந்தார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்களான மருது சகோதரர்களின் நினைவிடத்தில் மருது சகோதரர்களின் 222-வது நினைவு நாளையொட்டி, அதிமுக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பலரும் பங்கேற்றனர். இதையடுத்து செய்தியாளர்களை அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சந்தித்து பேசினார்.
அப்போது அவர், ஆளுநர் பேசியது குறித்து பேசுகையில், “என்ன சொல்லிக் கொடுத்தார்களோ அதை தான் அப்படியே ஆளுநர் பேசியுள்ளார். என்ன சொல்லி இருக்கிறார் என்பதைப் பற்றிய செய்தி எங்களுக்கு தெரியாது. விடுதலை போராட்ட வீரர்களின் வரலாற்றை ஆட்சியாளர்கள் மறைக்கிறார்கள் என்று யார் கூறினாலும் அது தவறு. ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியில் விடுதலை போராட்ட வீரர்களுக்கு சிலை வைத்தது, நினைவு மண்டபம் கட்டியது, அஞ்சல் தலை வெளியிட்டது என அனைவருக்கும் தெரியும்” என தெரிவித்தார்.