திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தொகுதியில் இருக்கும் விருப்பாட்சியில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கர் மணிமண்டபத்தில், 223-ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு,அவரின் உருவச்சிலைக்கு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார். அதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் பூங்கொடி உள்பட அதிகாரிகள் மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினார்கள்.
இதையடுத்து பேசிய அமைச்சர் சக்கரபாணி, “இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்டு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தலைவர்கள் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆகியோரின் தியாகங்களைப் போற்றிப் பாராட்டி, பெருமைப்படுத்துகின்ற வகையில், அரசின் சார்பில் அந்த தியாக சீலர்களுக்கு நகரின் முக்கிய பகுதிகளில் சிலைகளும், அவர்களின் நினை வினைப்போற்றுகின்ற வகையில் பிறந்த இடம், வாழ்ந்து மறைந்த வீடுகளை நினைவு இல்லங்களாகவும், நினைவு மண்டபங்களும், நினைவுத் தூண்களும் அரசின் சார்பில் அமைக்கப்பட்டு உரிய முறையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும், அப்பெருமக்களின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாட்களானது, அரசு விழாவாக தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகின்றன. தமிழ் சான்றோர்கள், விடுதலைப் போராட்டத் தியாகிகள் மற்றும் தலைவர்கள் ஆகியோரைப் பெருமைப்படுத்தும் வகையில், அன்னார்களது பிறந்தநாளன்று தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தி, விழாக் கொண்டாடப்பட்டு வருகிறது. விடுதலைப் போராட்டத் தியாகிகள், தமிழ்ச் சான்றோர்கள் மற்றும் தலைவர்கள் ஆகியோரின் வாழ்க்கை வரலாறு, போராட்டத்தில் பங்கேற்ற நிகழ்வுகளை நினைவுகூரும் வகையிலும், வருங்கால இளைய தலைமுறையினர் அதை அறிந்துகொள்ளும் வகையிலும், நினைவு மண்டபங்களில் படங்கள், வரலாற்றுத் தகவல்கள் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் அமைக்கப்பட்டு வருகின்றன.
நாட்டின் விடுதலைக்காக அரும்பாடுபட்ட தலைவர்கள் மற்றும் வீரர்களின் திருவுருவச் சிலைகளுக்குச் சுதந்திரதினம், குடியரசு தினம், தலைவர்களின் பிறந்த தினம் மற்றும் நினைவு தினங்களில் தலைவர்களின் உருவச்சிலைகள் மற்றும் படங்களுக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்திட ஆணையிட்டுள்ளார்கள். அதன்படி, விடுதலைக்காக அரும்பாடுபட்ட தலைவர்கள் மற்றும் வீரர்களின் உருவச் சிலைகள், படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம், விருப்பாட்சியை 40 ஆண்டுகள் ஆட்சி செய்து வெள்ளை ஏகாதிபத்தியத்தால் தூக்கிலிடப்பட்ட, தமிழ்நாட்டின் மிகப் பெரிய விடுதலைப் போராட்ட வீரர் குப்பளப்பாட்சா என்று திப்புசுல்தானாலும், கோபால் நாயக்கர் என்று மக்களாலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் திருமலை குப்பளசின்னப்ப நாயக்கர். விருப்பாட்சியைச் சுற்றிலும் தன்னுடைய உறவினர்களைக் கொண்டு பல ஊர்களை உருவாக்கி ஆண்டு வந்தார்.
சிவகங்கை ராணி வேலுநாச்சியார், பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரை ஆகியோருடன் இணைந்து வெள்ளையருக்கு வரி கட்டாமல் போராடினார். வெள்ளையர் ஆதிக்கத்தை எதிர்த்து திண்டுக்கல் பகுதியில் போரிட்டவர் விருப்பாட்சி கோபால் நாயக்கர். இவர் சிவகங்கை ராணி வேலுநாச்சியார், பாஞ்சாலங்குறிச்சி ஊமைத்துரை ஆகியோருக்கு தேவையான பாதுகாப்பையும், படை பலத்தையும் வழங்கியவர்.திண்டுக்கல் சீமை பாளையக்காரர்களை ஒன்றிணைத்து வலுவான கூட்டணியை கோபால் நாயக்கர் உருவாக்கி, புலித்தேவன், தீரன்சின்னமலை, வீரன் அழகுமுத்துக்கோன், வீரபாண்டிய கட்டப்பொம்மன் போன்ற பாளையக்காரர்களுடன் இணைந்து ஆங்கிலேயருக்கு வரி கட்ட மறுத்துப் போர் புரிந்தார். வீரபாண்டிய கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட பின்னர், பாஞ்சாலங்குறிச்சி சிறைக்குள்ளே பூட்டி வைக்கப்பட்டிருந்த அவருடைய தம்பி ஊமைத்துரையை, சிறைக்குள்ளே புகுந்து அதிரடிப்போர் நடத்தி, ஊமைத்துறையை மீட்டு, விருப்பாட்சிக்கு அழைத்து வந்து, 6000 படைவீரர்களை அவருக்கு அளித்து ஊமைத்துறையை பாஞ்சாலங்குறிச்சிக்கே மன்னராக்கியவர் கோபால் நாயக்கர்.
கும்பினிப்படையினரை எதிர்த்து நடைபெற்ற கொரில்லா தாக்குதலுக்கு கோபால் நாயக்கர்தான் காரணம் என்று கருதி அவரை 04.05.1801 அன்று வெள்ளையர்கள் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்து சித்ரவதை செய்தனர். பின்னர் திண்டுக்கல் கோபால சமுத்திரம் குளம் அருகே புளியமரத்தில் 05.09.1801 அன்று கோபால் நாயக்கர் தூக்கிலிடப்பட்டார். சாகும்போது கூட கொஞ்சமும் கலங்காமல் தன் மரணத்தைப் புன்னகையுடன் ஏற்றுக் கொண்ட மாவீரன் கோபால் நயக்கர் ஆவார். நாட்டின் விடுதலைக்காகக் கடந்த 05.09.1801-ஆம் ஆண்டு உயிர்த் தியாகம் செய்த கோபால் நாயக்கர் நினைவு தினம்(செப்டம்பர் 5-ஆம் தேதி) அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, விருப்பாட்சியில், விடுதலைப் போராட்ட வீரர் கோபால் நாயக்கரின் நினைவு தினமான இன்று(செப்டம்பர் 5) அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்படுகிறது.
இந்தியத் திருநாட்டின் நலனுக்காகப் பாடுபட்ட தலைவர்கள் வழியில், நாமும் செயல்பட்டு, நாட்டின் நலனைக் காப்பாற்ற இந்நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்” என்று கூறினார்.