உலகம் முழுவதும் கண் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் கண் அழுத்த நோய் தொடர்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மருத்துவமனை வளாகத்திற்குள் விழிப்புணர்வு பேரணியானது நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பேரணியில் 200க்கும் மேற்பட்ட செவிலியர்கள், பயிற்சி மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு பேரணியை திருச்சி அரசு மருத்துவமனை டீன் நேரு, மருத்துவ கண்காணிப்பாளர் அருண் ராஜ் உள்ளிட்டோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். பின்னர் இந்த விழிப்புணர்வு பேரணியானது வளாகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி அரங்கிற்கு வந்து சேர்ந்தது. கண்காட்சி அரங்கினை டீன் நேரு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பார்வையிட்டார். அந்த அரங்கிற்குள் கண் அழுத்த நோய் ஏற்படுவதற்கான காரணங்கள், அதை சரி செய்வதற்கான வழிமுறைகள், இயல்பாக கண்ணில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் குறித்த பல்வேறு விளக்கப் படங்கள், செயல்முறை விளக்கங்கள் உள்ளிட்டவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த டீன் நேரு கூறுகையில், "பெரும்பாலும் 40 வயதிற்கு மேற்பட்டவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த கண் அழுத்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். எனவே அவர்கள் கட்டாயம் மருத்துவர்களிடம் சென்று பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக் கொண்டால் இப்பிரச்சனையில் இருந்து விடுபடலாம். இதற்கான விழிப்புணர்வு மிகக் குறைவாக உள்ளது. எனவே பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட்டு இந்த கண் நோயை சரி செய்தால் கண் பார்வை இழப்பை தடுக்கலாம்" என்று கூறினார்.