தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் சட்டவிரோதமாக கருவில் உள்ளது ஆணா பெண்ணா என்பதை கண்டறிந்த கும்பல் அதிகாரிகளை பார்த்ததும் தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே சட்ட விரோதமாகக் கருக்கலைப்புகளில் ஈடுபடுபவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில், கடந்த வாரம் கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த கழுதூர் என்ற கிராமத்தில் உள்ள ஓம் சக்தி மெடிக்கலில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என ஸ்கேன் மூலம் சட்ட விரோதமாகத் தெரியப்படுத்தப்படுவதாகவும் கருக்கலைப்பில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியானது.
வேப்பூர் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் அகிலன் மற்றும் காவல்துறையினர் அந்த மெடிக்கலுக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அங்கு நடத்தப்பட்ட ஆய்வில் ஸ்கேன் செய்ய பயன்படுத்தப்படும் கருவி மற்றும் கருக்கலைப்புக்கு பயன்படுத்திய மருந்துகள் ஆகியவை இருந்தன. மெடிக்கலின் உரிமையாளரான மணிவண்ணன் மற்றும் அந்த மெடிக்கலில் மருந்தாளுநராக பணிபுரிந்த கௌதமி, இடைத்தரகர்கள் தினேஷ், கண்ணதாசன் ஆகிய நான்கு பேரை பிடித்தனர்.
இந்தநிலையில் இதேபோல தர்மபுரி மாவட்டம் தொப்பூர் பகுதியில் தனியாக வீடு எடுத்து தங்கிவந்த ஒரு கும்பல் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்பதை சட்டவிரோதமாக சோதனை செய்து தெரிவித்து வந்ததாக புகார் எழுந்தது. மாவட்ட நிர்வாகத்திற்கு இதுதொடர்பான ரகசியத் தகவல் கிடைத்த நிலையில் அந்த வீட்டிற்கு அதிகாரிகள் திடீர் சோதனைக்காக சென்றனர்.
அதிகாரிகளை பார்த்ததும் அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கருவில் இருக்கும் சிசு ஆணா, பெண்ணா என்பதை கண்டறிந்து சொல்வது மட்டுமல்லாது, கருக்கலைப்பு உள்ளிட்ட செயல்களும் அங்கு நடந்திருக்கலாம் என அதிகாரிகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் பணத்திற்காக சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இடைத்தரகர் ஒருவரை பிடித்த மருத்துவக் குழு, அவரை போலீசில் ஒப்படைத்துள்ளது. மேலும் அந்த கும்பல் விட்டுச் சென்ற இரண்டு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.