சென்னை திருவொற்றியூர் கிராம தெரு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி ஒன்றில் கடந்த 25 ஆம் வாயு கசிவு ஏற்பட்டு மாணவிகள் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வரும் நிலையில் திடீரென கெமிக்கல் வாசகம் வீசியதில் மூன்று மாணவிகள் மயக்கமடைந்த நிலையில் பள்ளியில் உள்ள அனைத்து குழந்தைகளும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் இன்று (04/11/2024) வாயுக்கசிவு ஏற்பட்ட அதே பள்ளியில் மீண்டும் மாணவிகள் மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்த மீண்டும் இந்த தகவல் பெற்றோர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது. உடனடியாக பள்ளிக்கு வந்த பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை அவசரமாக வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். இதனால் இந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் அவசரகதியாக வெளியேறிய பொழுது சிலர் தடுக்கி விழுந்து மயக்கமடைந்துள்ளனர். மொத்தமாக இதுவரை எட்டு பேர் மயக்கம் அடைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
மாணவர்களை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மாணவர்களை வகுப்பறைக்குள் புகுந்து அழைத்துச் செல்ல முயன்ற சில பெற்றோர்களும் மயக்கம் அடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்த வாயுக்கசிவு ஏற்பட்ட சம்பந்தப்பட்ட தனியார் பள்ளியில் வடக்கு வட்டார துணை ஆணையர் கட்டா ரவி தேஜா ஆய்வு மேற்கொண்டார். இந்நிலையில் பள்ளியானது தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
இந்நிலையில் மறு அறிவிப்பு வரும் வரை பள்ளி காலவரை இறையின்றி மூடப்படுவதாக பள்ளி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'பள்ளி திறப்பதற்கு முன்பு அரசு அதிகாரிகள் மற்றும் பெற்றோர்களுடன் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படும். பள்ளியில் எந்த பிரச்சனையும் இல்லை என்பதை உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே பள்ளி திறக்கப்படும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நகராட்சி, சுகாதாரத்துறை ஆய்வு மேற்கொண்டு உத்தரவு பிறப்பிக்கும் வரை பள்ளி திறக்கப்பட மாட்டாது' என தெரிவிக்கப்பட்டது.