சென்னையில் அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. குழந்தைவேலுவின் மனைவி, பெற்ற மகனால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க. முன்னாள் எம்.பி. குழந்தைவேலுவின் மனைவி ரத்தினம், சென்னை பெசன்ட் நகர் பகுதியில் வசித்துவந்தார். சில ஆண்டுகளுக்கு முன் குழந்தைவேலு இறந்து விட்டதால் அவரது மனைவி ரத்தினம் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில் நேற்றிரவு ரத்தினத்தின் வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து அவரது உறவினர் ஒருவர் சென்று பார்த்த போது, இறந்த நிலைமையில் இருந்தது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து தகவலறிந்த சாஸ்திரிநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், ரத்தினத்தின் மகன் பிரவீன் என்பவர் இங்கிலாந்து குடியுரிமை பெற்று அங்கேயே வசித்து வருவது தெரியவந்தது.
இந்நிலையில் ஒரு மாதத்திற்கு முன்பாக சொத்துப் பிரச்சனை காரணமாக பிரவீன் தமிழகம் வந்துள்ளார். சொத்து பிரிப்பது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் அவர் தனது தாயைக் கொலை செய்ததாக சந்தேகிக்கப்படுகிறது. இதையடுத்து தப்பி ஓடிய பிரவீனை போலீசார் தேடி வருகின்றனர்.