Skip to main content

கடலூர் கடற்கரையில் விழுந்த எரி விண்கற்கள்; கண்டுபிடித்த மாணவருக்குக் குவியும் பாராட்டுகள்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

Flaming meteorites fell on Cuddalore coast; Kudos to the student who discovered it

 

கடலூர் கடற்கரையில் விழுந்த எரி விண்கற்களைக் கண்டுபிடித்த மாணவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

கடலூர் ஒன்றிய அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி வருபவர் வெங்கடேசன். இவரது மகன் அனீஸ்வர். இவர் கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி நினைவு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சிறு வயது முதல் விண் ஆய்வில் ஆர்வம் கொண்டு வருகிறார். விண் ஆய்வு குறித்து நடைபெறும் போட்டிகளில் இவர் தொடர்ந்து வெற்றிபெற்று வந்துள்ளார். இவரது ஆர்வத்தைப் பார்த்த அவரது தந்தை இவருக்குத் தொலைநோக்கி விண் ஆய்வு உபகரணங்களை வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தியுள்ளார்.

 

இந்நிலையில் மாணவர் கடலூர் சில்வர் பீச் பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது விண்ணிலிருந்து விழுந்த 56 எரிகற்களைக் கண்டுபிடித்துள்ளார். பின்னர் அவை விண்ணிலிருந்து விழுந்த எரிகற்கள் என்பதை நிரூபித்து விண் ஆய்வாளர்கள் மத்தியில் அறிமுகம் செய்துள்ளார்.

 

இதனைச் சர்வதேச விண்ணியல் தேடல் குழுமம் மற்றும் ஹவாய் ஸ்டார் வான் ஆராய்ச்சி நிறுவனமும் அமெரிக்காவின் நாசா உடன் இணைந்து விண்கற்கள் குறித்த ஆய்வில் மாணவர் அனீஸ்வரை இணைத்துக் கொண்டு அவருக்கு அங்கீகார பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. சர்வதேச வான் ஆய்வுக் குழுமம் அவரை உறுப்பினராக அங்கீகரித்துள்ளது.

 

மாணவர் அனீஸ்வர் கடலூரில் விழுந்த 56 எரிகற்களுடன் ஏழு விண்கற்களையும் சிறு கோள்கள் கண்டுபிடித்து ஹார்ட்டின் சிமன்ஸ் பல்கலைக்கழகத்தின் டெக்சாஸ் விண் ஆய்வாளர் சான்றிதழும் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் தமிழ்நாடு இளையோர் விண் ஆய்வு மையம் என்னும் மாணவர் அமைப்பை ஏற்படுத்தி சக மாணவர்களிடையே விண்வெளி ஆய்வு குறித்த ஆர்வத்தை ஏற்படுத்த வருகிறார். இதனை அறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாணவரை நேரில் அழைத்துச் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துப் பாராட்டினார். சிறுவயதிலேயே மாணவர் விண் ஆய்வில் வெற்றி பெறுவது அனைவர் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்