கள்ளக்குறிச்சி அருகே உள்ள அணைக்கரை கோட்டாலத்தில் மணிமுக்தா அணை உள்ளது. இந்த அணையில் மீன்பிடிக்க பொதுப்பணித்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நபரிடம் குத்தகைக்கு விட்டனர். இதையடுத்து குத்தகைக்கு எடுத்தவர்கள் மணிமுக்தா அணையில் மீன்களை வளர்த்துப் பிடித்து விற்பனை செய்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த வாரம் குத்தகை காலம் முடிவடைந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மணிமுக்தா ஆற்றில் இன்று அதிகாலை முதலே அணையில் மீன் பிடி திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த மீன்பிடி திருவிழாவில் அகரக்கோட்டாலம், அணைக்கரைக்கோட்டாலம், வாணியந்தல், பெருவங்கூர், சிறுவங்கூர், தண்டலை, சூளாங்குறிச்சி, பள்ளிப்பட்டு ரங்கநாதபுரம், அரியபெருமானூர், ஆலத்தூர், ரோடுமாமந்தூர், நத்தமேடு, மோ.வன்னஞ்சூர் சோமண்டார்குடி, பரமநத்தம், புத்தந்தூர், பிச்சநத்தம், மூரார்பாளையம், மேலப்பட்டு உள்பட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2000-க்கும் மேற்பட்ட பொது மக்கள் அணைக்குள் ஆர்வத்துடன் இறங்கி போட்டி போட்டுக்கொண்டு வலை மற்றும் கைகளால் ஆர்வத்துடன் மீன்களைப் பிடித்து வருகின்றனர்.
இதில் ஒவ்வொருவரும் 5 கிலோ முதல் 20 கிலோ வரையிலான கண்ணாடி, ரோகு, விரால் உள்ளிட்ட மீன்களைப் பிடித்துவருகின்றனர் இந்த மீன்பிடி திருவிழாவில் சுமார் 5 ஆயிரம் கிலோ மீன்கள் சிக்கியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.