பேரிடர் காலங்களில் பொதுமக்களை பாதுகாக்க தீயணைப்பு வீரர்கள் உடல் உறுதியுடன் செயல்பட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் இயக்குனர் சைலேந்திரபாபு 360 கிலோ மீட்டர் சைக்கிள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் பேரிடர் காலங்களான புயல், மழை, வெள்ளம் உள்ளிட்ட நேரங்களில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு சிரமம் அடைந்து வருகிறார்கள். அவர்களை பாதுகாக்க தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை வீரர்கள் உடல் உறுதியுடன் இருந்து செயல்பட வேண்டுமென தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை இயக்குனர் சைலேந்திரபாபு தஞ்சாவூரிலிருந்து தாம்பரம் வரை 360 கிலோ மீட்டர் சைக்கிள் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளார்.
விழிப்புணர்வு பிரச்சாரம் ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணிக்கு தஞ்சாவூரில் புறப்பட்டுள்ளது. பின்னர் கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, சிதம்பரம், கடலூர், பாண்டிச்சேரி வழியாக தாம்பரம் சென்றடைகிறது. இந்த பேரணியில் ஒவ்வொரு பகுதிகளிலிருந்தும் 10 தீயணைப்பு வீரர்கள் அவருடன் சைக்கிளில் மாவட்ட எல்லை வரை செல்கிறார்கள்.
இதனைத்தொடர்ந்து சிதம்பரம் தீயணைப்பு நிலையத்திற்கு வந்த சைக்கிள் பேரணியை சிதம்பரம் டி.எஸ்.பி லாமேக், ஆய்வாளர் முருகேசன், உதவி ஆய்வாளர் சுரேஷ்முருகள் உள்ளிட்ட காவல்துறையினர், தீயணைப்பு வீரர்கள் வரவேற்றனர். பின்னர் சிதம்பரம் தீயணைப்பு நிலையத்தில் பேரிடர் காலங்களில் நவீன இயந்திரத்தை கொண்டு மரத்தை அறுப்பது, வெள்ளக் காலங்களில் படகில் சென்று பொதுமக்களை அழைத்து வருவது உள்ளிட்ட செயல் விளக்கங்கள் செய்து காட்டப்பட்டது.