Skip to main content

சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு!

Published on 30/06/2021 | Edited on 30/06/2021

 

 

film producer gnanavel raja chennai high court order


திரைப்பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு எதிராக சினிமா பைனான்சியர் போத்ரா தொடர்ந்த அவதூறு வழக்கை ரத்துச் செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நடிகரும், தயாரிப்பாளருமான சசிகுமாரின் பட நிறுவனத்தில் அவரது இணை தயாரிப்பாளராக இருந்த அவரின் உறவினர் அசோக்குமார் கடன் தொல்லை காரணமாக கடந்த 2017- ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்.

 

இந்த நிலையில் சினிமா துறையில் பைனான்ஸ்  கொடுத்த பணத்தை திருப்பித் தர முடியாதா நடிகர் சசிகுமார் உறவினர் தற்கொலை செய்து கொண்டது குறித்தும், பைனான்சியர்கள் கெடுபிடி செய்து வருவதாகவும், சினிமா பைனான்சியர் போத்ரா குறித்தும் அந்த நேரத்தில் ஞானவேல்ராஜா வாரப் பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளிக்கும் போது பைனான்சியர்கள் கெடுபிடியாக நடந்து கொள்கிறார்கள் என்று கருத்துகளை தெரிவித்து இருந்தார்.

 

இதனால் ஞானவேல் ராஜா, மற்றும் ஜூனியர் விகடன் மீதும் பைனான்சியர் போத்ரா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தாக்கல் செய்தார்.

 

இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஞானவேல் ராஜா சார்பில் கடந்த 2019- ஆம் ஆண்டு சென்னை மனு தாக்கல் செய்தார். அதில் தனக்கு எதிரான வழக்கில் எந்த வித ஆதாரங்கள் இல்லை எனவே வழக்கை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி தண்டபாணி, இன்று (30/06/2021) உத்தரவிட்டார். அதில் ஞானவேல் ராஜா மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை எனவே அவதூறு வழக்கை ரத்து செய்வதாக உத்தரவிட்டார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“உண்மைக்குப் புறம்பானது” - ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்கும் தயாரிப்பாளர்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
producer abdul malik jaffar sadiq case issue

மலேஷியாவை சேர்ந்தவர் அப்துல் மாலிக் பின் தஸ்தகீர். தொழிலதிபர், சினிமா தயாரிப்பாளர், சமூக சேவகர் எனப் பன்முகத் தன்மை கொண்டவராக இருந்து வருகிறார். மாலிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் என்ற பெயரில் பல தொழில் நிறுவனங்களை நடத்தி வருவதோடு, ஆதரவற்ற பல்வேறு மக்களுக்கு பல உதவிகளையும் செய்து வருகிறார். இவருடைய சமூக சேவையைப் பாராட்டி மலேஷிய ராயல் குடும்பம் ‘டத்தோ’ என்ற உயரிய விருதைக் கொடுத்து கெளரவித்துள்ளது.

இந்த நிலையில் அப்துல் மாலிக் பின் தஸ்தகீர், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சமீபத்தில் சில யு-டியூப் சேனல்களில் உண்மைக்கு புறம்பாக சில வீடியோ வெளியிடப்பட்டதாக காவல்துறை ஆணையாளரிடம் புகார் கொடுத்துள்ளார். அதில், சமீபத்தில் போதைப் பொருள் கடத்தலில் கைது செய்யப்பட்டிருக்கும் ஜாபர் சாதிக்குக்கும்  தனக்கும் தொடர்பு உண்டு என்று பிரபல யூட்யூப் சேனல் உண்மைக்குப் புறம்பாக அவதூறு செய்தி வெளியிட்டதாகத் தெரிவித்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும்படியும் 5 கோடி நஷ்ட ஈடு வழங்கக் கோரியும் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

“ஓ.பி.எஸ். இரட்டை இலையைப் பயன்படுத்தத் தடை தொடரும்” - உயர்நீதிமன்றம்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
ban on using OPS aiadmk symbol will continue says Madras High Court

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது.

இந்த மேல்முறையீட்டு வழக்கு பல கட்ட விசாரணைக்குப் பிறகு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் கடந்த 18 ஆம் தேதி, “அ.தி.மு.க. இரட்டை இலை சின்னம், கொடி ஆகியவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதிக்கப்படுகிறது” என அதிரடி தீர்ப்பை வழங்கி இருந்தார். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேலும் அந்த மனுவில், ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதா இல்லையா என்ற வழக்கு நிலுவையில் உள்ளதால்,  அந்த வழக்கின் தீர்ப்பு வரும் வரை தனக்கு கட்சியின் இரட்டை இலை, சின்னத்தையும் கொடியையும் பயன்படுத்த அனுமதியளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணையின் போது, “அதிமுகவின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்க்கு தடை விதிக்கப்பட்டது தொடர்பாக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது; ஓ.பி.எஸ். இரட்டை இலை, கட்சியின் பெயர் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்டிருந்த தடை தொடரும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த மேல்மூறையீடு தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பதிலளிக்க உத்தரவிட்டதோடு, இது தொடர்பாக ஓ.பி.எஸ் தேர்தல் ஆணையத்தை அணுகத் தடையில்லை என்றும் கூறியுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை ஜூன் 10 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.