கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கெலமங்கலம் அடுத்துள்ள காமையூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் முனிராஜ்(50). இவருக்கு மனைவி, ஒரு மகளும், மகனும் உள்ளனர். முனிராஜ் ஜே.காரப்பள்ளி கிராமத்தில் உள்ள ஒரு மாந்தோட்டத்தில் குடும்பத்தோடு தங்கி காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
ஜே.காரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த வெங்கட்ராஜ் என்பவர் தனது மகளைக் கடத்தி சென்றதாகக் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முனிராஜ் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் விசாரணை நடத்திய மகளிர் போலீசார் சிறுமியை கடத்திச் சென்ற குற்றத்திற்காக வெங்கட்ராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறையில் இருந்த வெங்கட்ராஜ் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை வெங்கட்ராஜ் மற்றும் அவரோடு சேர்ந்த சிலர் முனிராஜ் குடும்பத்தினர் தங்கி இருக்கும் மாந்தோட்டத்திற்குச் சென்று அவரது வீட்டின் கதவைத் தட்டி உள்ளனர். அப்போது வீட்டின் கதவைத் திறந்து வெளியே வந்த முனிராஜிடம் தகராறில் ஈடுபட்ட வெங்கட்ராஜ், ஒரு கட்டத்தில் அவரது மகளை அங்கிருந்து இழுத்துச் சென்றுள்ளார். அதிர்ச்சியடைந்த முனிராஜ் அதனைத் தடுத்துள்ளார். அப்போது வெங்கட்ராஜ் முனிராஜை கல் மற்றும் கட்டைகளால் சரமாரியாகத் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அப்பகுதியினர் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற கெலமங்கலம் போலீசார், கொலை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து முனிராஜின் உடலைக் கைப்பற்றி கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையாளி வெங்கட்ராஜ் சிறுமியுடன் தலைமறைவாகி இருந்த நிலையில் இரண்டு தனிப்படைகள் அமைத்து கெலமங்கலம் போலிசார் தீவிரமாகத் தேடி வந்தனர். இந்நிலையில் பெங்களூருவில் கொலையாளி வெங்கட்ராஜை கைது செய்த போலீசார் சிறுமியை மீட்டு கெலமங்கலம் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.