கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகில் உள்ள கீழ்ப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் குப்பன்(70). கூலித் தொழிலாளியான இவருக்கு மொத்தம் 4 மகன்கள். இவர்கள் நான்கு பேருக்கும் திருமணம் முடிந்து தனிதனியே வாழ்ந்துவருகின்றனர். இதில், சின்னப்பன் மற்றும் ஆறுமுகம் எனும் இருவருக்கு மட்டும் குழந்தைகள் உள்ளனர். மற்ற இரண்டு மகன்களுக்கும் இன்னும் குழந்தைகள் இல்லை. இந்நிலையில், குப்பன், தனது சொத்தை ஆறுமுகத்தின் மகனுக்கு மட்டும் எழுதிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், குப்பனின் மூத்த மகன் சின்னப்பன், தன் குழந்தைகள் பெயர்களிலும் சொத்து எழுதிவைக்க வேண்டும் என குப்பனிடம் கேட்டுள்ளார். இதில் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சின்னப்பன், தந்தையை அடித்தும், தலையை பிடித்து சுவற்றில் மோதியுமுள்ளார். அதில் குப்பன் மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனைக் கண்டு பயந்த சின்னப்பன் அங்கிருந்து தப்பித்து ஓடியுள்ளார்.
அக்கம்பக்கத்தினர், குப்பனை மீட்டுக் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே குப்பன் இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த அந்த ஊர் கிராம நிர்வாக அலுவலர் திலீப்குமார், சங்கராபுரம் காவல் நிலையத்தில் சம்பவம் குறித்து புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தந்தையை அடித்து கொலை செய்த மகன் சின்னப்பனை தீவிரமாக தேடி வருகின்றனர்.