
நெல்லையில் உள்ள இருட்டுக்கடை அல்வா குழும உரிமையாளர் கவிதாசிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா. இவர் கோவையை சேர்ந்த தனது கணவர் பல்ராம் சிங் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துவதாக நெல்லை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்து இருந்தார்.
இந்த நிலையில் இதுகுறித்து கோவையில் உள்ள பல்ராம் சிங்கின் தந்தை யுவராஜா நிருபர்களிடம் கூறியதாவது:- இருட்டுக்கடை அல்வா ஒரு ஆண்டுக்கு முன்புதான் கவிதாசிங்கின் பெயருக்கு மாறி உள்ளது. பெரிய குடும்பங்களில் இருந்து எல்லாம் எனது மகனுக்கு வரன் வந்தது. ஆனால் சாதாரண குடும்பத்தை சேர்ந்த கனிஷ்காவை நான் எனது மகனுக்கு திருமணம் செய்து வைத்தேன். திருமணத்துக்கு பின்னர்தான் அர்களுக்கு பலகோடி ரூபாய் கடன் இருப்பது தெரியவந்தது.
அவர்கள் வைத்திருந்த காருக்கு கடன் தவணை செலுத்த முடியாமல் அதை விற்று உள்ளனர். திருமண செலவு உள்பட அனைத்தையும் கடன் வாங்கிதான் செய்து உள்ளனர். இப்படிப்பட்டவர்களிடம் நாங்கள் ஏன் வரதட்சணை கேட்க போகிறோம். அவர்கள் நடத்தி வரும் கடையே வாடகை இடத்தில்தான் இருக்கிறது. அதை நாங்கள் கேட்டோம் என்று சொல்வது ஆதாரமற்றது. ரூ.1.25 கோடி காரை நாங்கள் வரதட்சணையாக கேட்கவில்லை. எங்கள் சொந்த பணத்தில் முன்பதிவு செய்தோம். மாப்பிள்ளைக்கு நாங்கள் எதுவும் செய்யவில்லை. இந்த காரை அவருக்கு பரிசாக கொடுக்க விரும்புகிறோம் என்று அவர்கள் கூறினர். எனவே நான்தான் பெயர் மாற்ற வேண்டும் என்று கார் நிறுவனத்துக்கு மெயில் அனுப்பினேன்.
எனது மகனுக்கும், மருமகளுக்கும் இடையே பிரச்சினை இருந்தது உண்மைதான். இந்த பிரச்சினையை சுமூகமாக முடிக்க வேண்டும் என்று நினைத்து நான் இன்று (அதாவது நேற்று) கூட வாட்ஸ்-அப்பில் குறுஞ்செய்தி அனுப்பினேன். இவற்றை எல்லாம் மறைத்துவிட்டு அவர் பொய்யான குற்றச்சாட்டை கொடுத்து உள்ளார். எனவே அவர் அளித்து உள்ள புகாரை சட்டப்படி எதிர்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து கனிஷ்காவின் கணவர் பல்ராம் சிங் நிருபர்களிடம் கூறும்போது, எங்களுக்கு திருமணமாகி கோவைக்கு நாங்கள் வந்த பின்னர், அவர் வெளியில் செல்வதாக கூறிவிட்டு அடிக்கடி சென்று வந்தார். அது குறித்து கேட்டபோதுதான் எங்களுக்குள் பிரச்சினை தொடங்கியது. இது தொடர்பாக எனது மனைவியின் தாயாரிடம் கூறியபோது, இதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று கூறினார். ஆனால் அவர் கேட்காமல் தொடர்ந்து இதுபோன்று செய்து வந்தார். நான் கண்டித்ததால் என்னை பற்றியும், எனது குடும்பத்தை பற்றியும் என் நண்பர்களிடம் தவறாக பேசி இருக்கிறார். அதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.