சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகம் மாநாட்டில் விஜய் அதிமுகவை பெரிதாக விமர்சிக்காமல் பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜெயக்குமார், ''இதற்கு எங்களுடைய கட்சியின் பொதுச்செயலாளர் விரிவாக பதில் சொல்லிவிட்டார். எங்களைப் பற்றி பேசவில்லை என்றால் ஒரு சிறப்பான ஆட்சி 31 ஆண்டு காலம் கொடுத்திருக்கிறோம். அது மட்டுமில்லாமல் மக்கள் போற்றுகின்ற ஆட்சி செய்திருக்கிறோம். 2026 ஆண்டு மக்கள் விரும்புகின்ற ஆட்சியைக் கொடுக்க வருகிறோம். அப்படி பழனிசாமி முதலமைச்சராக வரவேண்டும் என்ற எண்ணம் மக்களிடத்தில் இருக்கிறது.
இப்படி இருக்கும்போது ஒரு ஆட்சி சரியில்லை; கட்சி சரியில்லை என்றால் தான் விமர்சனம் வரும். சிறப்பான ஆட்சி கடந்த காலங்களில் நடத்தப்பட்டு கட்சி சிறப்பாக வழிநடத்தப்பட்டதால் எப்படி விமர்சனம் வரும்? மக்கள் விரோத போக்கை திமுக கடைப்பிடித்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டத்தில் பட்டியலின சிறுவன் ஒருவர் தாக்கப்பட்டு இருக்கிறார். அந்தநிலை தான் இன்று தமிழ்நாட்டில் இருக்கிறது. அப்படி ஒரு நிலைமை இருக்கும் பொழுது இந்த அரசை யார் பாராட்டுவார்கள். இவர்களே மாறி மாறி பாராட்டி கொள்கிறார்கள். ஒன்று அப்பா மகனை பாராட்டுவார். மகன் அப்பாவை பாராட்டுவார். இதுதான் இப்பொழுது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருக்கிறது. இந்திய அரசாங்கமோ, அமெரிக்காவோ ரஷ்யாவோ இந்த அரசாங்கத்தை பாராட்டவில்லை'' என்றார்.