மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணுக்கு அனுமதியின்றி குடும்பக் கட்டுப்பாடு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது.
இதுகுறித்து மதுரை அரசு மருத்துவமனையின் டீன் விளக்கம் அளித்து பேசுகையில், ''அரசு ராஜாஜி மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் நேற்று இரவு 1.20 மணிக்கு அப்சர் உசேன் என்பவரின் மனைவி ஆஷிகா பேகம் பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தார். மூன்று வருடங்களுக்கு முன்பு முதல் முறை சிசேரியன் செய்து தேவக்கோட்டையில் குழந்தை பிறந்திருக்கிறது. நம்மிடம் இரண்டாவது முறை நேரடியாக பிரசவத்திற்காக வந்திருக்கிறார்கள்.
நள்ளிரவு 1.20 முதல் காலை 5 மணி வரை சிசேரியனை தவிர்ப்பதற்கான முயற்சிகளை மகப்பேறு மருத்துவர் மல்லிகா தலைமையிலான குழுவினர் எடுத்தார்கள். அது முடியாததால் இரண்டாவது முறையும் சிசேரியன் செய்யப்பட்டது. குழந்தை நல்ல ஆரோக்கியமாக இருக்கிறது. மூன்றாவது சிசேரியன் ஆபத்து என்பதால் இரண்டாவது முறை சிசேரியன் செய்பவர்களுக்கு அனைவருக்கும் வழக்கமாக சொல்லும் அட்வைஸ் இரண்டாவது சிசேரியனோடு சேர்த்து குடும்பக் கட்டுப்பாடு செய்து கொள்ளுங்கள் என்பது. இது இவருக்கு மட்டுமல்ல.
இவருக்கு என்ன புதிய பிரச்சனை என்றால் ஹைட்ரோ சால்பின்ஸ் என்று சொல்லக்கூடிய கருக்குழாய்களில் நீர் கோர்த்து தங்கியிருந்தது தெரியவந்தது. இது ஆபரேஷன் பண்ணும் போது மட்டுமே தெரியக்கூடிய விஷயம். அதற்கும் முன்னால் சிடி ஸ்கேன், எக்ஸ்-ரே எடுத்தால் குழந்தைக்கு ஆபத்து என்பதால் நாம் எடுப்பதில்லை. ஆபரேஷன் செய்யும் போது மட்டுமே எதிர்பார்க்கக் கூடிய தன்மை கொண்ட வியாதி அந்த நீர் கோர்ப்பு.
ஆதலால் அந்த மகப்பேறு மருத்துவர் அந்த தாய்க்கு வருங்காலத்தில் மோசமான வியாதிகள் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடாது என்பதற்காக குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷனுக்கு நிகரான ஆபரேஷனான அதைச் செய்துள்ளார். இதனால் அவரால் இனிமேல் கருத்தரிக்க முடியாது. ஆனால், ஆபத்திருக்காது. இது நாம் முதலிலேயே எதிர்பார்க்கக் கூடிய நோய் இல்லை. ஆபரேஷன் செய்யும் போது தெரிய வந்ததால் தாயின் உடல் நிலையைக் கருதி இது செய்யப்பட்டுள்ளது. இதில் எந்த தவறும் இல்லை. தவறு இருக்க வேண்டிய அவசியமும் இல்லை'' என்றார்.