கள்ளக்குறிச்சி கனியாமூர் சக்தி பள்ளியில் மாணவி ஸ்ரீமதி மரணம் அடைந்தது தொடர்பாக அந்தப் பள்ளியின் தாளாளர் ரவிக்குமார், அவரது மனைவி சாந்தி மற்றும் இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் ஜாமீனில் வெளிவந்தார்கள்.
அந்த ஜாமீன் விடுதலையை எதிர்த்து மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பள்ளியின் தாளாளர் ரவிக்குமாரையும் அவரது மனைவி சாந்தியையும் போக்ஸோ வழக்கில் கைது செய்யாமல் சாதாரண வழக்கில் கைது செய்து அவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது சட்டவிரோதம் என சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த வழக்கில் செல்வி தரப்பு வழக்கறிஞர் சங்கரசுப்பு ஆஜராகி வாதாடினார். ‘கனியாமூர் சக்தி பள்ளி விவகாரத்தில் ஒருதலைபட்சமாக தமிழக போலீசாரும் சென்னை உயர்நீதிமன்றமும் நடந்து கொண்டார்கள். எனவே குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டும்’ என வழக்கறிஞர் சங்கரசுப்புவும் மற்ற சீனியர் வழக்கறிஞர்களும் வாதாடினார்கள்.
இந்த வாதத்தைக் கேட்ட சுப்ரீம் கோர்ட், ‘உங்களுக்கு ஏன் ஜாமீன் ரத்து செய்யக்கூடாது’ எனப் பதில் அளிக்குமாறு குற்றவாளிகள் 5 பேருக்கும் சிபிசிஐடி காவல்துறைக்கும் நோட்டீஸ் அனுப்புமாறு உத்தரவிட்டது.
ஸ்ரீமதி வழக்கில் இது ஒரு பெரிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது. தமிழக அரசு குற்றவாளிகளின் ஜாமீனிற்கு எதிராக அப்பீல் செய்யவில்லை. பொதுவாக அரசு செய்யும் அப்பீலைத்தான் உச்சநீதிமன்றம் சீரியஸாக எடுத்துக்கொள்ளும். அரசு அப்பீலே இல்லாமல் ஸ்ரீமதியின் தாயார் செய்த அப்பீலை சீரியசாக எடுத்துக்கொண்டு உச்சநீதிமன்றம் குற்றவாளிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி இருப்பது இந்த வழக்கில் போலீஸ் தரப்பு மேற்கொண்ட முரண்பாடான அணுகுமுறைக்கு எதிர் நடவடிக்கையாகவே பார்க்கப்படுகிறது.