தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று தனது ட்விட்டர் பதிவில் ‘திமுகவின் ஃபைல்கள்’ எனக் குறிப்பிட்டு ‘ஏப்ரல் 14, 2023 - காலை 10:15’ எனக் குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அவர் பதிவிட்ட காணொளியில் திமுகவின் முக்கிய தலைவர்களின் படங்கள் இடம்பெற்றிருந்தன. இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலை தனது ரஃபேல் வாட்ச் ரசீதை வெளியிட்டார். தொடர்ந்து திமுக அமைச்சர்கள் குறித்த வீடியோ ஒன்றை காட்சிப்படுத்தினார். அந்த வீடியோவில் திமுகவை சேர்ந்த முக்கியமானவர்களின் சொத்துமதிப்புகள் குறித்து காட்சிகள் இருந்தன.
இந்நிலையில் அண்ணாமலை வெளியிட்டுள்ள ஊழல் பட்டியல் குறித்த கேள்விக்கு பதிலளித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, ''எங்கே பார்த்தாலும் ஊழல்தான் மக்களுக்கே தெரியும். அதிமுகவாக இருந்தாலும் சரி, அண்ணாமலையாக இருந்தாலும் சரி நாங்கள் எல்லாம் சொல்லித்தான் தெரிய வேண்டும் என்று இல்லை. கோயம்புத்தூரில் சாதாரணமாக ஒரு லோடு மண் எடுக்க முடியாது. மண் எடுப்பதற்கு 3000, 4000, 5000 லஞ்சமாக வாங்குகிறார்கள், மாநகராட்சி ஆபீஸ், தாலுகா ஆபிஸ் என எங்கே போனாலும் சான்றிதழ்கள் வாங்குவதற்கு லஞ்சம். கடுமையாக ஊழல் எல்லா பக்கமும் பரவி இருக்கிறது. இது அனைத்து மக்களுக்கும் தெரியும். அவ்வளவு கொள்ளை அடிக்கிறார்கள் திமுக காரர்கள். கண்டிப்பாக இதற்கெல்லாம் முடிவு வரும். கரோனா காலத்தில் நாங்க வாரம் வாரம் மருந்து அடிச்சோம், மீட்டிங் போட்டோம். ஆனால் இப்பொழுது எந்த ஆய்வு கூட்டமும் இல்லை. சமீபத்தில் ஒரு பெண் கூட கோயம்புத்தூரில் இறந்து விட்டார் கரோனாவால். எதிர்க்கட்சித் தலைவர் மக்களுக்காக பல்வேறு கேள்விகளை சட்டமன்றத்தில் வைக்கிறார். அதையெல்லாம் வெளியவே தெரியவிடாமல் செய்து விடுகிறார்கள்'' என்றார்.