பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இன்றுடன் விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.
கடந்த ஜூன் 6 ஆம் தேதியுடன் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்தது. அதே சமயம் விண்ணப்பிக்க தவறிய மாணவர்களுக்கு மூலம் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
அதன்படி தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் ஆணையர் வெளியிட்டிருந்த அறிவிப்பில்,'பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே மாதம் 6 தேதி (06.05.2024) முதல் கடந்த 6 ஆம் தேதி (06.06.2024) வரை நடைபெற்றது. இதில் 2 லட்சத்து 49 ஆயிரத்து 918 மாணவர்கள் விண்ணப்பம் பதிவு செய்துள்ளனர். அதில் 2 லட்சத்து 6 ஆயிரத்து 12 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர். தற்பொழுது மாணாக்கர்களின் கோரிக்கைகளை ஏற்றுத் தமிழ்நாடு மாணாக்கர் பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நாளை (10.06.2024) மற்றும் நாளை மறுநாள் (11.06.2024) என இரண்டு நாட்கள் மேலும் நீட்டிக்கப்படுகிறது.
இதுவரை விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்கள் புதிதாக விண்ணப்பத்தினை www.tneaonline.org என்ற இணையதளம் வாயிலாகப் பதிவு செய்து, பதிவு கட்டணம் செலுத்தி தங்களது சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்' எனத் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஆகும். இதுவரை தமிழக முழுவதும் 2.50 லட்சம் மாணவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.