தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இந்நிலையில், 234 தொகுதிகளின் தேர்தல் முடிவுகளையும் மே 2ஆம் தேதி வெளியிடவுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தற்போது இந்தியா முழுவதும் கரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் மிகத் தீவிரமாக உள்ளதால் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், மறு உத்தரவு வரும் வரை இதே ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என அரசு தெரிவித்திருக்கிறது. ஆனால் மே 2ஆம் தேதி தேர்தல் முடிவு அறிவிப்பதாக இருக்கிற நிலையில், அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தேர்தல் முடிவு அறிவிப்பிற்கான தேதி மாற்றியமைக்கப்படுமா என்ற குழப்பம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, நேற்று (21.04.2021) காலை தேர்தல் கமிஷனுடன் தமிழக தேர்தல் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து, மாலை அனைத்து மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்கள், போலீஸ் எஸ்.பி.க்கள், சுகாதாரத்துறை ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோருடன் தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு ஆலோசனை நடத்தினார்.
பின்னர் ஆலோசனை தொடர்பாக செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “தமிழகத்தில் ஓட்டு எண்ணிக்கையின்போது மேற்கொள்ளப்பட உள்ள கரோனா தடுப்பு நடவடிக்கைகள், தற்போதுள்ள பாதிப்பு குறித்து தேர்தல் கமிஷன் அறிக்கை கேட்டுள்ளது. இது தொடர்பாக மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. குறைந்தது, 14 மேஜைகளில் ஓட்டு எண்ணிக்கை நடக்கும். மேஜைகளை 6 மீட்டர் இடைவெளியில் போடுவது சாத்தியமானதுதானா என அரசுடன் ஆலோசித்து வருகிறோம். மேலும் மேஜையை 7, 10, 14 என்ற அளவில் போடுவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அனைத்து தொகுதிகளிலும், நள்ளிரவு 12 மணிக்குள் இறுதி முடிவை அறிவிக்க திட்டமிட்டுள்ளோம்.
ஓட்டு எண்ணும் மையத்திற்கு வரும் அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்வது சாத்தியமா? பரிசோதனை செய்வதாக இருந்தால், எத்தனை நாள் ஆகும்? என சுகாதாரத்துறையினருடன் ஆலோசித்து வருகிறோம். ஓட்டு எண்ணிக்கையை ஒத்தி வைப்பது குறித்து எந்த ஆலோசனையும் நடக்கவில்லை” என அவர் கூறினார். இதனைத் தொடர்ந்து ஓட்டு எண்ணிக்கை மேஜைகளைக் குறைக்காமல் ஏற்கனவே நடைமுறையில் உள்ள முறையைப் பின்பற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலர் பாலகிருஷ்ணன் தமிழக தேர்தல் அதிகாரிக்கு மனு அளித்துள்ளார்.