நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த், உடல் நலக்குறைவு காரணமாகச் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். விஜயகாந்த்தின் மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால், வெண்டிலேட்டர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், விஜயகாந்த் இன்று (28-12-23) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். விஜயகாந்தின் மறைவு தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அங்கு தொண்டர்கள், ரசிகர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கூட்டம் கூட்டமாக வந்து அஞ்சலி செலுத்தி வந்தனர்.
இதையடுத்து அவரது உடல் தேமுதிக அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது உடலுக்கு முழு அரசு மரியாதை செய்யப்படும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். இந்நிலையில் விஜயகாந்த் உடலுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார். மேலும் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, ஜெயக்குமார், சி. விஜயபாஸ்கர் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.