திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் எலும்பு சிகிச்சை பிரிவு மருத்துவராக பணியாற்றுபவர் மருத்துவர் சுரேஷ்குமார். இவரது மனைவியான கவித்தாள் அறுவை சிகிச்சை மருத்துவராகவும், உதவி பேராசிரியராகவும் இதே மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றுகிறார்.
இந்த தம்பதிக்கு 13 வயதில் ஒரு மகள், 4 வயதில் ஒரு மகன் உள்ளனர். ஆனால் சுரேஷ்குமாருக்கு, வேறு ஒரு மருத்துவ பெண்மணியிடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் மனைவி கவித்தாளுக்கு தெரியவந்துள்ளது. இதனால் கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் சுரேஷ்குமார் மனைவியை கண்டபடி பேசுவது, அடிப்பது என இருந்துள்ளார். கணவர் மாறுவார் என காத்திருந்தும் அது நடக்காததால் ஓராண்டுக்கு முன்பு விவகாரத்து பெற்றுள்ளார் கவித்தாள். இதையடுத்து கணவன் – மனைவி இருவரும் தனித்தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் பிள்ளைகள் தாத்தா பாட்டியை பார்க்க வேண்டும் எனக்கேட்டுக்கொண்டதால் சில நாட்களுக்கு முன்பு செய்யார் நகரில் உள்ள சுரேஷ்குமார் வீட்டுக்கு பிள்ளைகளுடன் சென்றுவிட்டு திரும்பிவந்துள்ளார் கவித்தாள். இதைக்கேள்விப்பட்ட சுரேஷ்குமார், மருத்துவமனையில் பணியில் இருந்த கவித்தாளிடம் வந்து, நீ எப்படி என் வீட்டுக்கு போகலாம் எனக்கேட்டு கொச்சையான வார்த்தைகளில் திட்டி, அடிக்க பாய்ந்துள்ளார். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சிகிச்சைக்காக வரும் இடத்தில் ஒரு மருத்துவர் இப்படி நடந்துக்கொண்டது பலரை அதிர்ச்சியடையவைத்தது.
இதுப்பற்றி மருத்துவக்கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் திருவண்ணாமலை மகளிர் காவல்நிலையத்தில் புகார் தந்துள்ளார் கவித்தாள். புகாரை பெற்ற இன்ஸ்பெக்டர் ஹேமமாலினி ஜீன் 12ந்தேதி விசாரணை நடத்த.. சுரேஷ்குமார் முழு போதையில் காவல்நிலையம் வந்து நான் யார் தெரியும்மா, என் பின்னாடி அசோசியேஷன் இருக்கு ஞாபகத்தில் வச்சிக்குங்க என சவுண்ட் விட்டு போலீஸாரை மிரட்டினார். இருப்பினும் தொடர்ந்து கணவன் – மனைவி இருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறது போலீஸ்.
முன்னாள் மனைவியை கடுமையான வார்த்தைகளால் கொடுமைப்படுத்தியதோடு, பணியில் உள்ள மருத்துவரை தாக்க முயன்றுள்ளார், பெண் என்றும் பார்க்காமல் மருத்துவமனையில் அராஜக போக்குடன் நடந்துக்கொள்கிறார். காவல்நிலையத்தில் குடித்துவிட்டு விசாரணைக்கு வருகிறார். இப்படி தவறு மேல் தவறு செய்யும் மருத்துவர் மீது புகார் தரப்பட்டும் காவல்துறையும், சுகாதாரத்துறையும் சுரேஷ்குமார் மீது நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டுகிறது. எதனால் என்பது தான் புரியாத புதிராகவுள்ளது.
Published on 13/06/2018 | Edited on 13/06/2018